மும்மொழி கொள்கையை மாற்றக் கூடாது: அமித்ஷாவுக்கு காங்கிரஸ் பதில்


மும்மொழி கொள்கையை மாற்றக் கூடாது:  அமித்ஷாவுக்கு காங்கிரஸ் பதில்
x
தினத்தந்தி 15 Sep 2019 5:23 PM GMT (Updated: 15 Sep 2019 5:23 PM GMT)

இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளுங்கள் என கூறிய அமித்ஷாவுக்கு, மும்மொழி கொள்கையை மாற்றக் கூடாது என்று காங்கிரஸ் பதில் அளித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் நடந்த இந்தி தின நிகழ்ச்சி ஒன்றில் அமித்‌ஷா, “இந்தியை, இந்தியாவின் தேசியமொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பன்முகத் தன்மை என்பது இந்தியாவின் அடிப்படை என்றாலும் ஒரே மொழியை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்வது கலாச்சார ரீதியாக ஒன்றிணைக்கும். மற்ற மொழிகளை அழித்து இந்தியை வளர்க்கப் போவதில்லை. இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளுங்கள்,” என்று கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த கருத்திற்கு தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பின.

அமித்ஷாவின் இந்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா பதில் அளிக்கையில், “ சுதந்திரத்துக்கு பின்னர் பிரதமராலும், அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களாலும் இயற்றப்பட்ட உணர்வுப்பூர்வமான, முக்கியமான பிரச்சினைகள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்கக் கூடாது. குறிப்பாக நேரு காலத்தில் மொழி பிரச்சினை எழுந்தபோது மும்மொழி கொள்கை இயற்றப்பட்டது. அதனை மாற்றக்கூடாது. அதனை மாற்றியமைக்கும் சிந்தனையே வரக்கூடாது. அது நாட்டில் அமைதியின்மையை உருவாக்கிவிடும்.

இந்தியர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தி பேசுபவர்கள் தான். ஆனால் உலக மொழி என்ற வகையில் ஆங்கிலத்துக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழ், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, ஒடியா, குஜராத்தி, மராத்தி போன்றவைகளும் இந்திய மொழிகள் தான். நாம் இந்தி தினம் கொண்டாடலாம். நானும் இந்தி பேசுபவன் தான். ஆனால் இந்தியாவின் அனைத்து பிறமொழிகளையும் நான் மதிக்கிறேன்” என்று கூறினார்.

Next Story