74-வது பிறந்த நாளை சிறையில் கழிக்கும் ப.சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு இன்று 74-வது பிறந்த தினமாகும்.
புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்ட சிதம்பரம், கடந்த 5 ஆம் தேதி முதல் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் உள்ளார்.
சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வரும் 23-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதனால், வரும் 19-ம் தேதிவரை சிதம்பரம் திகார் சிறையில்தான் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
நீதிமன்றக் காவலில் இருக்கும் ப.சிதம்பரத்துக்கு திங்கள் கிழமை (இன்று) 74-வது பிறந்ததினம் ஆகும். முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் முதல் முறையாக தனது பிறந்தநாளை சிறையில் கழிக்க உள்ளார்.
வழக்கமாக தனது பிறந்தநாளை குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடும் சிதம்பரம், கட்சித் தொண்டர்களை சந்தித்து வாழ்த்தை பெற்றுக்கொள்வார். ஆனால் இந்த முறை ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருப்பதால், தனது பிறந்தநாளை முதல்முறையாக சிறையில் கழிக்க உள்ளார்.
Related Tags :
Next Story