குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அங்கு வதந்திகள் பரவி வன்முறை வெடிக்காமல் இருக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
370-வது சட்டப்பிரிவு ரத்துக்கு எதிராகவும், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, மருத்துவமனை முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இதற்கிடையே, தனது உறவினர்களை சந்திக்க ஜம்மு காஷ்மீர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்ரீநகர், பரமுல்லா அனந்தநாக் மற்றும் ஜம்மு ஆகிய பகுதிகளுக்கு குலாம் நபி ஆசாத் செல்ல அனுமதி அளித்தது. அதேவேளையில், ஜம்மு காஷ்மீரில் எந்த ஒரு பொதுக்கூட்டமும் நடத்தக்கூடாது எனவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
மேலும், காஷ்மீர் தொடர்பான மனுக்கள் மீது மீண்டும் வரும் 30ந் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story