குஜராத்தில் பிரதமர் மோடியின் டீ கடை சுற்றுலா இடமாகிறது


குஜராத்தில் பிரதமர் மோடியின் டீ கடை சுற்றுலா இடமாகிறது
x
தினத்தந்தி 17 Sep 2019 1:40 PM GMT (Updated: 2019-09-17T19:10:05+05:30)

குஜராத்தில் பிரதமர் மோடியின் டீ கடை விரைவில் சுற்றுலா இடமாக அறிவிக்கப்படுகிறது.

வட்நகர்,

பிரதமர் மோடி குஜராத் மாநிலம் வட்நகரில் பிறந்தவர். அவர் சிறுவயதில் வட்நகர் ரெயில் நிலையத்தில் தனது தந்தை நடத்தி வந்த டீக்கடையில் வேலை பார்த்தார். தந்தைக்கு உதவியாக டீ விற்பனையில் ஈடுபட்டார். மோடி தனது வாழ்க்கை பயணத்தை இந்த டீக்கடையில் இருந்து தான் தொடங்கினார்.  இதற்கிடையே பிரதமர் மோடி சிறுவயதில் டீ விற்ற கடையை சுற்றுலா தளமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது.  அதன்படி வட்நகர் ரெயில் நிலையத்தில் உள்ள டீக்கடை அதன் பழமை மாறாமல் பொலிவுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வட்நகரை சுற்றுலா தளமாக்கவும் முடிவு செய்யப்பட்டது. அங்கு சர்மிஷ்டா ஏரி, படிக்கிணறு போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் உள்ளன. அதனை மேம்படுத்தும் பணிகள் நடந்தன. அண்மையில் வட்நகரில் பழம்பெரும் புத்த மடாலயத்தில் சிதைவுகளை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்தனர். அதற்கான அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மோடி பிறந்த வட்நகரையும், அதனையொட்டியுள்ள பகுதிகளையும் சுற்றுலா தளமாக்க ரூ.100 கோடி செலவாகும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது வட்நகர் ரெயில் நிலைய பணிகளுக்காக சுற்றுலாத்துறை ரூ.8 கோடி நிதி ஒதுக்கி இருந்தது. 

இதையடுத்து ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடி வேலை பார்த்த டீக்கடை அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. விரைவில் வட்நகர் சுற்றுலா தளமாக அறிவிக்கப்படுகிறது.

Next Story