சுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு - மொத்த எண்ணிக்கை 34 ஆக உயர்வு


சுப்ரீம் கோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு - மொத்த எண்ணிக்கை 34 ஆக உயர்வு
x
தினத்தந்தி 23 Sept 2019 2:49 PM IST (Updated: 24 Sept 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டில் நேற்று 4 புதிய நீதிபதிகள் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களையும் சேர்த்து சுப்ரீம் கோர்ட்டின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது.

புதுடெல்லி,

பஞ்சாப்-அரியானா, ராஜஸ்தான், இமாசல பிரதேசம், கேரளா ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதிகளாக பணியாற்றி வந்த, முறையே கிருஷ்ணா முராரி, ரவீந்திர பட், ராமசுப்ரமணியன், ரிஷிகேஷ் ராய் ஆகிய 4 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டின் கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அவர்கள் 4 பேரின் நியமனத்துக்கும் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

இதைத்தொடர்ந்து கிருஷ்ணா முராரி, ரவீந்திர பட், ராமசுப்ரமணியன், ரிஷிகேஷ் ராய் ஆகிய 4 பேரும் நேற்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். சுப்ரீம் கோர்ட்டு அறையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் புதிய நீதிபதிகள் 4 பேருக்கும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

புதிதாக பதவியேற்றுக்கொண்ட இந்த 4 நீதிபதிகளையும் சேர்த்து, சுப்ரீம் கோர்ட்டின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது. சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையும் 34 என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை 30-ல் இருந்து 34 ஆக மத்திய அரசு உயர்த்தி இருந்தது.

சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கடிதம் எழுதியிருந்தார். அதன்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story