144 தடை உத்தரவு தொடர்ந்து அமல்: காஷ்மீர் பகுதி இயல்பு நிலையை இழந்து 2 மாதங்கள் நிறைவு
காஷ்மீர் பகுதி இயல்பு நிலையை இழந்து 2 மாதங்கள் நிறைவடைந்தது. அங்கு தொடர்ந்து 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பியது.
இந்த நடவடிக்கையையொட்டி பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு, 144 தடை, தொலைதொடர்பு துண்டிப்பு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் ஜம்மு பிராந்தியத்தில் மட்டும் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த மாதம் விலக்கிக்கொள்ளப்பட்டன.
ஆனால் காஷ்மீரில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கின்றன. அங்கு ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டாலும், 144 தடை உத்தரவு பெரும்பாலான பகுதிகளில் இன்னும் நீடிக்கிறது. இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்து நேற்றுடன் 2 மாதம் (60 நாட்கள்) நிறைவடைந்த நிலையில், காஷ்மீரில் இன்னும் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது.
குறிப்பாக அரசு போக்குவரத்து, ரெயில் சேவை அனைத்தும் முடங்கி உள்ளது. எனினும் தனியார் வாகனங்கள் குறைவான எண்ணிக்கையில் இயங்குகின்றன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் பெரும்பாலும் மூடப்பட்டு உள்ளன. இதனால் சந்தைகள், கடை வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி கிடக்கின்றன.
காஷ்மீரின் ஓரிரு பகுதிகளில் நடந்த கல்வீச்சு சம்பவங்களை தவிர, பள்ளத்தாக்கு பகுதிகள் முழுவதும் அமைதியான சூழல் நிலவுகிறது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அனந்த்நாக், சோபியான், புல்வாமா, அவந்திப்போரா, டிரால், குல்காம் உள்ளிட்ட பகுதிகள் அனைத்திலும் இந்த நிலையே நீடிக்கிறது.
காஷ்மீர் முழுவதும் கடந்த 2 மாதங்களாக செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஐ.டி. ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
காஷ்மீரில் தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை பள்ளிகள் ஏற்கனவே திறக்கப்பட்டு இருந்தன. ஆனால் மாணவர்கள் வராததால் அவை வெறிச்சோடிய நிலையில், மேல்நிலை பள்ளிகளை திறக்கவும் தற்போது உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆனால் எந்த பள்ளியிலும் மாணவர்கள் வராததால் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. மாணவர்கள் வராததால் பள்ளிகள் வெறிச்சோடி கிடக்கின்றன
Related Tags :
Next Story