சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப்பின் காஷ்மீரில் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு


சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப்பின் காஷ்மீரில் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு
x
தினத்தந்தி 5 Oct 2019 1:00 AM IST (Updated: 5 Oct 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப்பின் காஷ்மீரில் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டது. இதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிமாநிலத்தவர்கள் வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி அங்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில கூலித்தொழிலாளர்களும் வெளியேறினர். இதனால் மாநிலம் முழுவதும் கட்டுமானப்பணிகள் முடங்கி கிடக்கிறது.

புல்வாமாவில் உள்ள கன்மோ தொழிற்பேட்டையில் மொத்தமுள்ள 200 யூனிட்டுகளும் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. உள்ளூரை சேர்ந்தவர்கள் மற்றும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களும் இன்னும் பணிக்கு திரும்பவில்லை. இதனால் தினமும் ரூ.3 கோடிக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தொழிற்பேட்டை தலைவர் ஜூபைர் அகமது வேதனை தெரிவித்தார்.

இதைப்போல மாநிலத்தில் நீடிக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு துறைகள் முடங்கி இருப்பதால் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆகஸ்டு 5-ந் தேதிக்குப்பின் வேலை இழந்து இருக்கின்றனர்.

இதற்கிடையே காஷ்மீர் பகுதியில் போடப்பட்டு உள்ள கட்டுப்பாடுகள் நேற்று 61-வது நாளாக நீடித்தன. இதனால் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து முடங்கி உள்ளது. நேற்று சிறிய மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்தது. ஆனால் ஸ்ரீநகரின் புகழ்பெற்ற ஜாமியா மசூதியில் 9-வது வாரமாக நேற்றும் தொழுகைக்கு அனுமதி இல்லை.

Next Story