இந்திய எல்லை முன்பை விட வலிமையாக உள்ளது ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு


இந்திய எல்லை முன்பை விட வலிமையாக உள்ளது ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 9 Oct 2019 4:45 AM IST (Updated: 9 Oct 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

இந்திய எல்லைகள் முன்எப்போதையும் விட பாதுகாப்பாக உள்ளன என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியுள்ளார்.

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் ஆண்டுதோறும் விஜயதசமி விழா, கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல், நேற்று இந்த விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக எச்.சி.எல். நிறுவன தலைவர் சிவ நாடார் கலந்து கொண்டார்.

மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, ஜெனரல் வி.கே.சிங், மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், சாஸ்திர பூஜை செய்தார். பிறகு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களிடையே பேசினார். அவர் பேசியதாவது:-

பாரதத்தை சேர்ந்த, பாரத மூதாதையர்களின் சந்ததியினர், நாட்டின் புகழுக்கு பாடுபடுபவர்கள், அனைத்து வேற்றுமைகளையும் மதிப்பவர்கள் ஆகிய அனைத்து இந்தியர்களையும் ‘இந்துக்களாகவே’ நாம் பார்க்கிறோம். நாட்டின் அடையாளத்தை பற்றிய நமது பார்வை மிகவும் தெளிவானது. பாரதம் என்பது இந்துஸ்தான், இந்து ரா‌‌ஷ்டிரம் என்பதுதான் எங்கள் பிரகடனம்.

நாட்டு மக்கள் அனைவரும் இணக்கமாக வாழ வேண்டும். அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டு வாழ வேண்டும். நமது தொண்டர்கள் அந்த கண்ணோட்டத்தில் வளர்க்கப்பட்டவர்கள். இதை விரும்பாதவர்கள் பாரதத்தில் உள்ளனர். வளர்ந்த பாரதமானது, அந்த சக்திகளின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. பாரதம் வலிமையாகவோ, துடிப்பானதாகவோ இருப்பதை அவர்கள் விரும்புவது இல்லை.

இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சுமுகமாக நடக்குமா என்பதை அறிய உலகமே ஆவலாக இருந்தது. இந்தியாவில் ஜனநாயகம் என்பது வேறு நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது அல்ல. பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் வழக்கம்.

இந்தியாவின் எல்லைகள், முன்எப்போதையும் விட பாதுகாப்பாக உள்ளன. கடலோர பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சாலைமார்க்க எல்லையிலும், கடல்சார் எல்லையிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

உலக பொருளாதார மந்தநிலை, எல்லாநாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதை சமாளிக்க கடந்த ஒன்றரை மாதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நமது சமுதாயம், தொழில்முனைவோர் சார்ந்தது. எனவே, இந்த சவால்களில் இருந்து மீண்டு எழும்.

நாட்டில் கும்பல் வன்முறைகள் நடப்பது கவலை அளிக்கிறது. ‘லிஞ்சிங்’ (அடித்து கொலை) என்ற வார்த்தை, இந்திய பண்பாட்டில் வந்ததல்ல. அது, ஒரு மத அடையாளம் கொண்டது. இந்தியர்களாகிய நாம் சகோதரத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.

அது ஒரு மேலைநாட்டு வார்த்தை. இந்தியர்கள் மீது அதை திணிக்காதீர்கள். இந்தியாவை களங்கப்படுத்தும்வகையில், இந்திய சூழலில் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்.

இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

Next Story