டென்மார்க்கில் பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு


டென்மார்க்கில் பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 9 Oct 2019 4:15 AM IST (Updated: 9 Oct 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

கெஜ்ரிவால், டென்மார்க்கில் பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது.

புதுடெல்லி,

டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் ‘சி40’ என்னும் பருவநிலை மாற்ற மாநாடு இன்று (9-ந்தேதி) தொடங்குகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கோபன்ஹேகன் செல்ல இருந்தார்.

ஆனால் கெஜ்ரிவால் செல்வதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு மறுத்து விட்டது.

இதுகுறித்து ஆம்ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் கூறியதாவது:-

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் நகரில் பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால், மத்திய அரசிடம் அனுமதி கோரி இருந்தார்.

ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது.

கெஜ்ரிவால் விடுமுறையை கழிப்பதற்காக அங்கு செல்லவில்லை. 100 நகர மேயர்கள் கலந்து கொள்கிற பருவநிலை மாற்ற மாநாட்டில்தான் கலந்து கொள்ள இருந்தார்.

மாசுவை கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் சிறந்த பார்வையை அவர் அந்த மாநாட்டில் முன் வைத்திருப்பார். அதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது.

முதல்-மந்திரியின் எத்தனை உத்தியோகப்பூர்வமான பயணங்கள் ரத்தாகி உள்ளன? கடந்த மாதமே நாங்கள் அனுமதி கோரியும் இப்போது மறுக்கப்பட்டிருக்கிறது.

அவர் இந்த மாநாட்டில் முக்கிய உரை ஆற்ற இருந்தார். அத்துடன் டென்மார்க்கில் கார்பன் உமிழ்வு பற்றிய அமர்விலும் கலந்து கொள்ள இருந்தார்.

நியூயார்க், லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், பெர்லின் மேயர்களுடன் பருவ நிலை மாற்றம் குறித்து விவாதித்தும் இருப்பார்.

ஆனால் இப்போது அனுமதி தரப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story