டுவிட்டரில் டிரெண்டான 'திரும்பி செல்லாதீர் மோடி' ஹேஷ்டேக்


டுவிட்டரில் டிரெண்டான திரும்பி செல்லாதீர் மோடி ஹேஷ்டேக்
x
தினத்தந்தி 13 Oct 2019 8:12 AM IST (Updated: 13 Oct 2019 8:12 AM IST)
t-max-icont-min-icon

டுவிட்டரில் 'திரும்பி செல்லாதீர் மோடி' என்ற பொருள்படும் வகையிலான ஹேஷ்டேக் டிரெண்டானது.

புதுடெல்லி,

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஞ்சீபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வந்தார். அப்போது போலீசாரின் பலத்த பாதுகாப்பையும் மீறி பல்வேறு கட்சியினர் கறுப்பு கொடியுடன் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

அப்போது இந்த போராட்டங்கள் குறித்த செய்திகள் மற்றும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்துகள் அனைத்தும், #GoBackModi என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் பகிரப்பட்டது.  இந்த ஹேஷ்டேக் அப்போது இந்திய அளவில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய வருகைக்கு முன் அவரை வரவேற்கும் வகையில் #TNwelcomesXiJinping என்ற ஹேஷ்டேக் மூலம் ஒரு தரப்பினர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு இருந்தனர். ஆனால் இன்னொரு பக்கம் பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு தரப்பினர் #GoBackModi என்ற ஹேஷ்டேக் மூலம் அவருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டனர்.

இதற்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் அடையாளமாக #TNwelcomesModi என்ற ஹேஷ்டேக் மூலம் பிரதமர் மோடியை வரவேற்று தங்கள் கருத்துகளை டுவிட்டரில் பலர் பதிவிட்டனர்.  

திரும்பி போ என்ற பொருள்படும் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டான நிலையில், அதற்கு பின்புலத்தில் பாகிஸ்தான் இருந்துள்ளது என்பது உளவு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நடைபெற்ற அன்று, காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, கடற்கரையில் இருந்த குப்பைகளை கைகளால் அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டார்.  இதனை டுவிட்டரில் பலர் வரவேற்றனர்.

இதன்பின்பு பிரதமர் மோடியுடனான சந்திப்புக்காக சென்னை ஓட்டலில் இருந்து மாமல்லபுரத்துக்கு வந்த சீன அதிபரை, அங்குள்ள அர்ஜூனன் தபசு அருகே பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். அப்போது மிகவும் இயல்பாக காணப்பட்ட இரு தலைவர்களும் நண்பர்களைப்போல மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

பின்னர் இருவரும் பேசிக்கொண்டே அங்குள்ள பல்லவர் கால சிற்பங்களை நடந்து சென்று பார்வையிட்டனர். கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை கல் என தமிழர்களின் கட்டிடக்கலையை பறைசாற்றும் சின்னங்களை இரு தலைவர்களும் பார்த்து ரசித்தனர்.  இந்த சந்திப்புக்கு பின்பு பிரதமர் மோடி சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார்.

இதனிடையே, மோடி திரும்பி போக வேண்டாம் என்று பொருள்படும் வகையில் #DontGoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.

உண்மையான ஒரு தலைவர் எடுத்துக்காட்டாக முன்னே செல்வார்.  நாட்டின் பிரதமர் திரு. மோடி அவர்களே, பீச்சில் குப்பைகளை அள்ளும் பொழுது... என ஒருவர் தெரிவித்து உள்ளார். 

தமிழ் கலாசாரம் பற்றி வேறு எந்த பிரதமரும் பேசவில்லை.  நமது அன்பிற்குரிய பிரதமர் மோடி அதனை செய்துள்ளார் என ஒருவர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று மற்றொருவர், தமிழ் மக்கள் அன்புடன் #DontGoBackModi என்று கூறுகின்றனர் என்று தெரிவித்து உள்ளார்.  இதனால், டுவிட்டரில் 'திரும்பி செல்லாதீர் மோடி' என்ற பொருள்படும் வகையிலான ஹேஷ்டேக் டிரெண்டானது.

Next Story