பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பேரை அரசு பள்ளியில் சேர்க்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு புகலிடம் தேடி வந்துள்ள 3 பேருக்கு அரசு பள்ளியில் சேர இடமளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி,
டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று பாகிஸ்தானைச் சேர்ந்த சஞ்சனா பாய், மூனா குமாரி மற்றும் ரவி குமார் ஆகிய மூன்று பேருக்கும் டெல்லி அரசு பள்ளியில் சேர்ந்து படிக்க இடமளிக்குமாறு தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு புகலிடம் தேடி வந்துள்ள இவர்களுக்கு டெல்லியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு காரணமாக இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இவர்களை பள்ளியில் சேர்க்க அனுமதி அளிக்கக் கோரி இவர்களது பெற்றோர் நீதிமன்றத்தின் உதவியை நாடினர். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ரமேஷ் சிங், “மனிதாபிமான அடிப்படையில் வேண்டுமானால் இவர்களுக்கு பள்ளியில் சேர அனுமதி அளிக்கலாம்” என்று தெரிவித்தார்.
மாணவர்கள் சார்பில் ஆஜரான வக்கில் அசோக் அகர்வால், “எதற்காக மனிதாபிமான அடிப்படையில் இடம் தர வேண்டும்? நாங்கள் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை. நாங்கள் எங்கள் உரிமையை கேட்கிறோம். அரசாங்கம் தொண்டு செய்வதில்லை. அரசியலமைப்பு முறைப்படி தான் அது செயல்படும்” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய நீதிபதி சக்தேர், “அரசாங்கம் தொண்டு செய்வதில்லை என்று வக்கீல் அகர்வால் கூறியது சரிதான். அரசியலமைப்பு முறைப்படி இது மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையாகும்” என்றார்.
பின்னர் இந்த மூன்று மாணவர்களுக்கும் டெல்லி அரசு உயர்நிலை பள்ளியில் சேர அனுமதி அளிக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story