மராட்டியம், அரியானாவில் மீண்டும் பா.ஜனதாவே ஆட்சி அமைக்கும் - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்


மராட்டியம், அரியானாவில் மீண்டும் பா.ஜனதாவே ஆட்சி அமைக்கும் - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்
x
தினத்தந்தி 22 Oct 2019 4:15 AM IST (Updated: 22 Oct 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியம், அரியானா மாநிலங்களில் மீண்டும் பா.ஜனதா கட்சி எளிதான வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

புதுடெல்லி,

மராட்டியம், அரியானா ஆகிய மாநிலங்களில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் பலவேறு தேசிய தொலைக்காட்சி சானல்களும், சில அமைப்புகளும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை வெளியிட்டன. இதில் பெரும்பாலானவை 2 மாநிலங்களிலும் பா.ஜனதா மூன்றில் இரண்டு பங்குக்கு மேலான வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மொத்தம் 288 தொகுதிகள் கொண்ட மராட்டிய மாநிலத்தில் இந்தியா டுடே, ஆக்சிஸ் வெளியிட்ட கருத்து கணிப்பில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு 166 முதல் 194 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 72 முதல் 90 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

நியூஸ்18-ஐ.பி.எஸ்.ஓ.எஸ். கருத்து கணிப்பில் பா.ஜனதா கட்சிக்கு மட்டும் பெரும்பான்மைக்கு சற்று குறைவாக 142 இடங்கள் கிடைக்கும் என்றும், சிவசேனாவுக்கு 102 இடங்கள் கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கூட்டணிக்கு 17 முதல் 22 இடங்களே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

‘ஏ.பி.பி.-சி வோட்டர்’ கருத்து கணிப்பு பா.ஜனதா கூட்டணிக்கு 204 இடங்கள், காங்கிரஸ் கூட்டணிக்கு 69 இடங்கள் என கூறியுள்ளது. ‘போல் ஆப் போல்ஸ்’ பா.ஜனதா கூட்டணிக்கு 211 இடங்கள், காங்கிரஸ் கூட்டணிக்கு 64 இடங்கள் என கணித்துள்ளது.

மராட்டிய மாநில 2014 தேர்தலில் பா.ஜனதா 122 இடங்களிலும், சிவசேனா 63 இடங்களிலும், காங்கிரஸ் 42 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட அரியானாவில் பா.ஜனதாவுக்கு 72 இடங்களும், காங்கிரசுக்கு 8 இடங்களும் கிடைக்கும் என்று ஏ.பி.பி.-சி வோட்டர் கணித்துள்ளது.

சி.என்.என்.-ஐ.பி.எஸ்.ஓ.எஸ். கருத்து கணிப்பில் பா.ஜனதாவுக்கு 75 இடங்கள், காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ‘போல் ஆப் போல்ஸ்’ கருத்து கணிப்பு பா.ஜனதாவுக்கு 66 இடங்கள், காங்கிரசுக்கு 14 இடங்கள் என கூறியுள்ளது.

இங்கு 2014 தேர்தலில் பா.ஜனதா 47 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தளம் 19 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும், அரியானா ஜன்ஹித் காங்கிரஸ் 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி, சிரோமனி அகாலிதளம் தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story