இஸ்ரோ: நிலவில் ஆர்கான் 40 வாயு இருப்பது கண்டுபிடிப்பு


இஸ்ரோ: நிலவில் ஆர்கான் 40 வாயு இருப்பது கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 1 Nov 2019 12:08 PM GMT (Updated: 1 Nov 2019 12:52 PM GMT)

சந்திரயான்-2 விண்கலம் மூலம் நிலவின் புறக்காற்று மண்டலத்தில் ஆர்கான் 40 வாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா,

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் கடந்த ஜூலை மாதம் சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பியது. 
இந்த திட்டத்தின் ஒரு பகுதியான விக்ரம் லேண்டர் மூலம் நிலவில் தரை இறங்கும் முயற்சி தோல்வி அடைந்தாலும், அதன் ஆர்பிட்டர் நிலவின் சுற்று வட்டப்பாதையில் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் மூலம் நிலவின் மேற்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள வாயுக்கள் குறித்த விரிவான ஆய்வுகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் ஆர்பிட்டர் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் மிக நெருக்கமான புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது.

இந்நிலையில் நிலவின் எக்ஸோ அடுக்கு(Exosphere) என்று அழைக்கப்படும் புறக்காற்று மண்டலத்தில் ஆர்கான் 40 வாயு மூலக்கூறுகள் இருப்பதை ஆர்பிட்டரில் உள்ள சேஸ்-2 (CHASE-2) என்ற கருவி கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது.

நிலவின் தரை பகுதியில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் உயரத்தில் இந்த வாயுவின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில் நிலவில் ஆர்கான் 40 வாயுவின் தோற்றம் மற்றும் அதன் இயக்கவியல் குறித்த விளக்கப்படம் இணைக்கப்பட்டுள்ளது. ஆர்கான் 40 என்பது ஆர்கான் வாயுவின் ஐசோடோப்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story