அயோத்தி வழக்கின் தீர்ப்பை மதிக்க வேண்டும்: முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் வேண்டுகோள்


அயோத்தி வழக்கின் தீர்ப்பை மதிக்க வேண்டும்: முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 Nov 2019 10:30 PM GMT (Updated: 1 Nov 2019 9:29 PM GMT)

அயோத்தி வழக்கின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

லக்னோ,

அயோத்தி வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ந்தேதி ஓய்வு பெறும் நிலையில், அதற்கு முன் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பை மதித்து, மதநல்லிணக்கம் பேண வேண்டும் என முஸ்லிம்களுக்கு, அனைத்திந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

இது தொடர்பாக அனைத்து மசூதிகளின் மதகுருக்களுக்கு (இமாம்) வாரிய மூத்த உறுப்பினர் காலித் ரஷீத் பிராங்கி மகலி எழுதியுள்ள கடிதத்தில் கூறுகையில், ‘அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வரும் என ஊடகங்கள் கூறியுள்ளன. சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான வழக்கு இது என உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த வழக்கின் தீர்ப்பை ஒட்டுமொத்த இந்தியாவும், சர்வதேச சமூகமும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றன. எனவே இந்த தீர்ப்பை மதித்து, அமைதியை பேண வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்து அச்சப்பட வேண்டாம் எனவும், தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் நாட்டின் அரசியல்சாசனம், நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் முஸ்லிம்களுக்கு விளக்குமாறு ஒவ்வொரு மதகுருக்களையும் கேட்டுக்கொள்வதாக காலித் ரஷீத் கூறியுள்ளார்.


Next Story