இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் மோடி பேச்சுவார்த்தை: தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு


இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் மோடி பேச்சுவார்த்தை: தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு
x
தினத்தந்தி 1 Nov 2019 11:00 PM GMT (Updated: 2019-11-02T03:16:51+05:30)

இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

புதுடெல்லி,

இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் பிரதமர் மோடி டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் அமைக்கப்படும் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடத்தில் ஜெர்மனி முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், அரசு முறை பயணமாக நேற்று காலையில் இந்தியா வந்தார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டு, ஏஞ்சலா மெர்கலை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

பின்னர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்கு சென்று ஏஞ்சலா மெர்கல் மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் தலைமையில் இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கு இடையேயான 5-வது உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது இரு தலைவர்களின் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டன. அந்தவகையில் உயர் கல்வி, தேசிய அருங்காட்சியகம், கால்பந்து, செயற்கை நுண்ணறிவு, கடல்சார் தொழில்நுட்ப பயிற்சி போன்ற துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மேலும் விண்வெளி ஆய்வு, சிவில் விமான போக்குவரத்து, மருத்துவம், விவசாயம், ஆயுர்வேத-யோகா அகாடமி உள்ளிட்ட துறைகள் தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.

இவை தவிர இரு தலைவர்களின் சார்பில் 5 கூட்டு பிரகடனங்களும் வெளியிடப்பட்டன. குறிப்பாக பசுமை நகர்ப்புற இயக்கம், செயற்கை நுண்ணறிவு ஆய்வு மற்றும் மேம்பாடு, கடல்மாசு தடுத்தல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பது தொடர்பாக கூட்டு பிரகடனங்கள் வெளியிடப்பட்டன.

இந்த சந்திப்பை தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடி, “உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் அமைக்கப்படுகிற ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடத்தில் முதலீடு செய்து பலன்களை அடையுமாறு ஜெர்மனிக்கு இந்தியா அழைப்பு விடுக்கிறது” என்று தெரிவித்தார்.

ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில், ராணுவ தளவாட உற்பத்திக்கான முதல் வழித்தடத்தை உத்தரபிரதேசத்திலும், 2-வது வழித்தடத்தை தமிழகத்திலும் மத்திய அரசு அமைக்கிறது.

தமிழகத்தில் அமைக்கப்படும் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடத்தை கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைத்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், இந்த வழித்தடத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ரூ.3,038 கோடிக்கான முதலீட்டு அறிவிப்புகளையும் வெளியிட்டார். இந்த வழித்தடத்தில் முதலீடு செய்ய வருமாறு இப்போது ஜெர்மனிக்கு பிரதமர் அழைப்பு விடுத்து உள்ளார்.

பேட்டியின் போது மோடி தொடர்ந்து கூறியதாவது:-

2022-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இதற்கு தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் ஜெர்மனி போன்ற பொருளாதார வல்லரசுகள் உதவிகரமாக இருக்கும்.

பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க நாங்கள் உறுதிபூண்டு இருக்கிறோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர் திருத்தங்களை மேற்கொள்ள இந்தியாவும், ஜெர்மனியும் தொடர்ந்து ஒத்துழைக்கும்.

எலெக்ட்ரானிக் இயக்கம், ஸ்மார்ட் சிட்டிகள், நதிகளை தூய்மைப்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பு சாத்தியங்களை ஆராய நாங்கள் முடிவு செய்து உள்ளோம். புதிய மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, திறன், கல்வி மற்றும் இணையதள குற்றங்களில் இருந்து பாதுகாப்பு போன்ற துறைகளில் இருநாடுகளும் தங்கள் ஒத்துழைப்பை மேம் படுத்த முடியும்.

ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு இரு நாடுகளும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன. எனவே உலகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளில் இரு நாடுகளும் பொதுப்பார்வையை வழங்க முடியும். அந்த அடிப்படையில் எங்கள் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடரும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

பேட்டியின் போது ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கூறியதாவது:-

நிலையான வளர்ச்சி மற்றும் பருவநிலை பாதுகாப்பு போன்ற துறைகளில் மிகவும் நெருங்கி இணைந்து உழைக்க நாங்கள் திட்டமிட்டு உள்ளோம். பசுமை நகர்ப்பு இயக்கத்துக்காக இந்தியாவுக்கு 1 பில்லியன் யூரோ (சுமார் 7,800 கோடி) வழங்க தயாராக இருக்கிறோம்.

இருநாட்டு மக்களையும் ஒன்றிணைக்க நாங்கள் விரும்புகிறோம். ஜெர்மனியில் சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும் என ஜெர்மனி விரும்புகிறது. தொழில்நுட்ப பயிற்சி திட்டம் அமலுக்கு வரும்போது இரு நாடுகளுக்கு இடையே ஆசிரியர்களையும் பரிமாறிக்கொள்ள நாங்கள் விரும்புகிறோம்.

இதேபோல் கலாசார மற்றும் விவசாய துறைகளிலும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. விவசாய துறையில் எங்கள் பங்களிப்பு இந்தியாவுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவின் மிகப்பெரும் உள்கட்டமைப்பு திட்டங்களில் பங்களிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு ஏஞ்சலா மெர்கல் கூறினார்.

முன்னதாக ஏஞ்சலா மெர்கலின் வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியா, ஜெர்மனி இடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சீர்திருத்தப்படும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கோருவதற்கு இருநாடுகளும் உரிமையுள்ளவை எனக்கூறிய அவர், அந்தவகையில் ஜி-4 அமைப்பின் அங்கமாக இரு நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்றும் கூறினார்.


Next Story