டெல்லியில் காற்றின் தரம் அபாய அளவிலேயே நீடிப்பு


டெல்லியில் காற்றின் தரம் அபாய அளவிலேயே நீடிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2019 8:36 AM IST (Updated: 2 Nov 2019 8:36 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் காற்று மாசு அபாய அளவிலேயே தொடர்ந்து நீடிக்கிறது. இதனால், மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் குளிர்காலங்களில் விவசாயிகள் வைக்கோல் உள்ளிட்ட விவசாய கழிவு பொருட்களை எரிக்கிறார்கள். இதனால் எழும் புகையால், டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கிறது. ஆண்டுதோறும் இந்த பிரச்சினை, டெல்லியை வாட்டுகிறது. கட்டுமான பணிகள், பட்டாசு வெடித்தல் போன்றவற்றாலும் காற்று மாசு அதிகரிக்கிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு, காற்று மாசு அதிகரித்தபடியே சென்றது. நேற்று காலை, ‘சிவியர் பிளஸ்’ எனப்படும் அபாய அளவை எட்டியது.

இதையடுத்து, டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் 5-ந் தேதி வரை மூடுவது என்று டெல்லி மாநில அரசு முடிவு செய்தது. இதை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். மேலும், சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) ஆணையம், நேற்று பொது சுகாதார அவசர நிலையை பிறப்பித்தது. பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்தது.

5-ந் தேதி வரை, பள்ளி குழந்தைகளை வெளியில் நடமாட விடவேண்டாம் என்று அறிவுறுத்தியது. பெரியவர்கள், திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. குழந்தைகள், முதியோர் ஆகியோர் மீது சிறப்பு கவனம் செலுத்துமாறும் கூறியுள்ளது.

அத்துடன், டெல்லியில் மட்டுமின்றி, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள உத்தரபிரதேசம், அரியானா ஆகிய அண்டை மாநில பகுதிகளிலும் கட்டுமான பணிகளுக்கு 5-ந் தேதி வரை சுற்றுச்சூழல் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது. பட்டாசு வெடிப்பதற்கு குளிர்காலம் முழுவதும் தடை விதித்துள்ளது. குழாய்வழி இயற்கை எரிவாயு முறைக்கு மாறாத தொழிற்சாலைகள், 5-ந் தேதி வரை இயங்க அனுமதி கிடையாது என்றும் அறிவித்துள்ளது.

பிளாஸ்டிக்குகளையும், குப்பைகளையும் எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இந்த அறிவிப்பை சுற்றுச்சூழல் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணைய தலைவர் புரே லால் வெளியிட்டார். இந்த கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் அமல்படுத்துமாறு டெல்லி, அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.

இன்று காலையும் காற்று மாசு அதிகமாக காணப்பட்டது. காற்றின் தரம் சிவியர் பிளஸ் என்ற நிலையிலேயே நீடிக்கிறது. வானம் தெரியாத அளவுக்கு காற்று மாசு, பனிப்படலம் போன்று காட்சி அளிக்கிறது. இதனால், காலைவேளைகளில் நடைபயிற்சி செல்வோர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். 

Next Story