ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. மனு


ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. மனு
x
தினத்தந்தி 7 Nov 2019 2:45 AM IST (Updated: 7 Nov 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் வழக்கு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. மனு அளித்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, பணப்பட்டுவாடா புகார் காரணமாக அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மேலும் அந்த தேர்தல் தொடர்பாக நடந்த வருமானவரித்துறை சோதனையில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கின. இது தொடர்பான வழக்கை சமீபத்தில் ஐகோர்ட்டு ரத்து செய்தது.

இதையடுத்து, ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணம் வினியோகிக்கப்பட்டது தொடர்பாக தி.மு.க. முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, தி.மு.க. சட்ட திருத்தக்குழு செயலாளர் பி.வில்சன் ஆகியோர் டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நேற்று சந்தித்து மீண்டும் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு ஆளும்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான கிரிமினல் வழக்கை கோர்ட்டு ரத்து செய்துள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்ய வேண்டும் அல்லது புதிய புகார் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, ‘இதுவரை 4 முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்புவோம்’ என்றார்.


Next Story