விலை உயர்வை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி - மத்திய அரசு நடவடிக்கை


விலை உயர்வை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி - மத்திய அரசு நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Nov 2019 11:15 PM GMT (Updated: 6 Nov 2019 9:48 PM GMT)

விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது.

புதுடெல்லி,

வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் வரும் என்ற நிலை மாறி, வெங்காயத்தை நினைத்தாலே இல்லத்தரசிகளுக்கு கண்ணீர் வருகிற வகையில் அதன் விலை ஏற்றம் கண்டுள்ளது.

எந்த கூட்டு, பொரியல், பச்சடி, குழம்பு என்றாலும், அவற்றை சமைக்க வெங்காயம் அவசியம் தேவை என்ற நிலையில், கிலோ ரூ.100 வரையில் விற்பனையாகிறபோது, இந்த விலை உயர்வை சந்திக்க முடியாமல் இல்லத்தரசிகள் நாடு முழுவதும் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் வெங்காயம் கையிருப்பு நிலவரம், அதன் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து டெல்லியில் நேற்று உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி, துறைக்கான மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, “வெங்காய இருப்பு பற்றியும், விலை நிலவரம் குறித்தும் ஆய்வு செய்தோம். நாட்டில் வெங்காய உற்பத்தி 30 முதல் 40 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. பருவ மழையின் வருகையில் ஏற்பட்ட தாமதத்தால் அடுத்த சாகுபடி பாதித்தது. பல மாநிலங்களில் மழை, வெள்ளத்தால் உற்பத்தி பாதித்தது. வெங்காய வினியோகம், தேவையைப் பொறுத்து விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். தற்போது இது சம நிலையில் இல்லை. இருப்பினும் சந்தையில் வெங்காயத்தை கூடுதலாக கிடைக்கச்செய்யவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கிறது” என கூறினார்.

மேலும், “தற்போதைய நிலை குறித்து கவலை கொள்கிறோம். அரசாங்கம் தன்னால் இயன்றதை செய்யும். இதில் நாங்கள் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்கிறோம்” என கூறினார்.

ஒரு நிருபர், “வெங்காய விலை எப்போது குறையும்?” என கேள்வி எழுப்பியபோது, ராம்விலாஸ் பஸ்வான், “ நான் ஜோதிடர் அல்ல” என பதில் அளித்தார்.

தொடர்ந்து கூறும்போது, “இருப்பினும் இந்த மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் வெங்காய விலை குறைந்து விடும் என நம்புவோம்” என குறிப்பிட்டார்.

இந்த பிரச்சினையை சமாளிப்பது தொடர்பாக பொதுமக்களும், ஊடகங்களும் யோசனைகள் கூறலாம் எனவும் அவர் கூறினார்.

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கைகளை அவர் விவரித்தார். அதன் முக்கிய அம்சங்கள்:-

* வெங்காய ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது.

* வியாபாரிகள் வெங்காய இருப்பு வைப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெங்காய இருப்பை விடுவித்து, கிலோ ரூ.23.90 என்ற மலிவு விலையில் விற்பனை செய்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு அவர்கள் உதவ வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

* ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை தனியார் மூலம் இறக்குமதி செய்வதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது. வெங்காய இறக்குமதிக்கான நடைமுறைகளை தாராளமயமாக்க விவசாயத்துறை அமைச்சகம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.


Next Story