நீண்ட கால பிரச்சினை முடிவுக்கு வந்தது: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


நீண்ட கால பிரச்சினை முடிவுக்கு வந்தது: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 10 Nov 2019 5:45 AM IST (Updated: 10 Nov 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, இதற்காக அறக்கட்டளை ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், அயோத்தியில் மசூதி கட்டு வதற்காக 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படுகிற 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது.

அந்த நிலத்துக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு, 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை ஏற்க மறுத்து அந்த 3 அமைப்புகளும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன. மேலும் சிலரும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டனர். மொத்தம் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் கோர்ட்டுக்கு வெளியே சமரச தீர்வு காண சுப்ரீம் கோர்ட்டு மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததால், அரசியல் சாசன அமர்வு வழக்கை தொடர்ந்து விசாரித் தது. கடந்த மாதம் 16-ந் தேதியுடன் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.

நாடு முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று பரபரப்பான தீர்ப்பை வழங்கினார்கள்.

தீர்ப்பு வழங்குவதற்காக சரியாக காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் மற்ற நீதிபதிகளும் தங்கள் இருக்கைகளில் வந்து அமர்ந்தனர். அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கி இருப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பு தாள்களில் கையெழுத்திட, அவரை தொடர்ந்து மற்ற நீதிபதிகளும் கையெழுத்திட்டனர்.

அதன்பிறகு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் அனுமதி வழங்கியும், அதேசமயம் அயோத்தி நகர எல்லைக்குள் மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

அரசியல் சாசன அமர்வின் சார்பில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பின் முக்கியமான பகுதிகளை 40 நிமிடங்கள் வாசித்தார்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

வரலாறு, மதம் என பலவற்றை கடந்து அயோத்தி வழக்கில் உண்மை பயணித்து உள்ளது. ஒரு மதத்தின் நம்பிக்கையில் தொடரப்பட்ட வழக்கு மற்ற மதத்தின் நம்பிக்கையை தடுக்கும் விதமாக அமையக் கூடாது. மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது வரலாறு. அரசியலமைப்பின் அடிப்படை பண்பு மதசார்பின்மை ஆகும்.

நாட்டில் அமைதியை காக்கும் வகையிலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இந்த வழக்கின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்திற்கு உரிமை கோரும் ஷியா அமைப்பின் மனுவில் ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை. இந்திய தொல்லியல் துறை ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என தெரிய வந்து உள்ளது.

பாபரின் படைத்தளபதி மீர்பாகி அங்கு பாபர் மசூதியை கட்டி இருக்கிறார் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பதும், இஸ்லாமிய முறையிலான அடையாளங்கள் ஏதும் இன்றி இருந்த ஒரு கட்டிடத்தின் மேல்தான் அந்த மசூதி கட்டப்பட்டு உள்ளது என்பதும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்தி உள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

சர்ச்சைக்குரிய இடத்தில் ஏற்கனவே மசூதி இருந்ததற்கு ஆதாரம் இல்லை. அந்த இடத்தில் கோவில் இருந்ததாக தொல்லியல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 12-ம் நூற்றாண்டுக்கும் 16-ம் நூற்றாண்டுக்கும் இடையேயான காலகட்டத்தில் சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் என்ன இருந்தது என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.

நிலத்திற்கு உரிமை கோரும் விவகாரத்தில் சட்டத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்ய முடியும். சர்ச்சைக்குரிய நிலத்தில்தான் ராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை விவாதத்திற்கு உள்ளாக்க முடியாது. அங்கு இருந்த பாபர் மசூதி கட்டிடத்தின் கூம்பு பகுதிக்கு கீழே உள்ள பகுதியில்தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நீண்டகாலமாக நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள்.

அதேநேரத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தே அந்த இடத்தின் மீது தங்களுக்கு உள்ள உரிமையை விட்டுக்கொடுக்க முஸ்லிம்கள் முன்வரவில்லை.

ஆவணங்களின்படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது. இந்த வழக்கில் தொல்லியல் துறையின் ஆதாரங்களை புறம் தள்ள முடியாது. இந்துக்களின் நம்பிக்கையை குலைக்க முடியாது. மத நம்பிக்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. சர்ச்சைக்குரிய கட்டிடம் இருந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தியதற்கான ஆதாரம் உள்ளது. நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோர முடியாது.

சர்ச்சைக்குரிய நிலத்தின் முற்றத்தை இந்துக்கள் தங்கள் வசம் வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே அயோத்தியில் இந்துக்கள் ராமர், சீதையை வணங்கியதற்கு ஆதாரம் உள்ளது.

பாபர் மசூதி, ராமஜென்ம பூமி ஆகியவற்றை உள்ளடக்கிய சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின் மீதான உரிமை ராம் லல்லாவுக்கு உள்ளது.

சர்ச்சைக்குரிய நிலத்திற்கு ஒட்டுமொத்தமாக சன்னி வக்பு வாரியம் உரிமை கோர முடியாது. பாபர் மசூதி இஸ்லாமிய முறையிலானது அல்ல என்ற வாதத்தையும் ஏற்க முடியாது. பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புக்கள் நிரூபிக்கவில்லை.

நிர்மோகி அகாரா தரப்பின் மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது. ராம்லல்லா அமைப்பின் மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மேலும் ஷியா அமைப்பின் கோரிக்கையை ஏற்க முடியாது என்பதால் அந்த அமைப்பின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சன்னி வக்பு வாரியத்தின் மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதம். அது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறிய செயல்.

சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று தரப்பினரும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு செல்லாது.

அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.



 


 இதற்காக, இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை உருவாக்க வேண்டும். அந்த அறக்கட்டளையில் நிர்மோகி அகாரா அமைப்புக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். அந்த அறக்கட்டளையின் செயல்பாடு, நிர்வாகம், அதிகாரம் உள்ளிட்டவை குறித்து மத்திய அரசு விதிமுறைகளை உருவாக்க வேண்டும். கோவில் கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த அறக்கட்டளைக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.

அயோத்தியில் சர்ச்சைக்கு உரிய இடத்தில் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களை அந்த அறக்கட்டளையின் அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மத்திய அரசு அமைக்கும் அறக்கட்டளையின் வசம் சர்ச்சைக்கு உரிய இடத்தின் உரிமை இருக்கும்.

அறக்கட்டளையிடம் இந்த இடத்தை ஒப்படைக்கும் அதே சமயம், அயோத்தியில் முக்கியமான பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை சன்னி மத்திய வக்பு வாரியத்துக்கு மத்திய அரசு அல்லது உத்தர பிரதேச மாநில அரசு வழங்க வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட தவறான செயலை சரி செய்யும் வகையில் ஒரு மசூதியை கட்டிக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு உள்ளது. அரசு தரப்பில் ஒப்படைக்கப்படும் நிலத்தில் சன்னி மத்திய வக்பு வாரியம் அனைத்து வசதிகளுடன் புதிய மசூதியை கட்டிக்கொள்ளலாம்.

இந்த இரு தரப்பினரிடமும் உரிய நிலத்தை ஒப்படைப்பது குறித்து மத்திய அரசும், மாநில அரசும் பரஸ்பரம் ஆலோசனை செய்து இத்திட்டத்தை உரிய முறையில் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

நீதிபதிகளின் தீர்ப்பு 1,045 பக்கங்களை கொண்டதாக இருந்தது.

அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வந்தது. நாடாளுமன்ற தேர்தலின்போது அயோத்தி பிரச்சினை தீவிரம் அடையும். பின்னர் சற்று ஓய்ந்து விடும்.

சுப்ரீம் கோர்ட்டு நேற்று வழங்கிய தீர்ப்பின் மூலம் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்து உள்ளது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத் தில் ராமர் கோவில் கட்ட அனுமதி.

* கோவில் கட்டுவதற்காக 3 மாதத்திற்குள் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இந்த அறக்கட்டளையில் நிர்மோகி அகராவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கலாம்.

* சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை விவாதத்துக்கு உள்ளாக்க முடியாது.

* மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் முக்கியமான பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்கவேண்டும்.

* சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராம்லல்லா, நிர்மோகி அகரா, சன்னி வக்பு வாரியம் ஆகியவை சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்ற அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பு செல்லாது.




 


 தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள்

அயோத்தி வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு மேற்கொண்டது. இதில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூ‌ஷண், அப்துல் நசீர் ஆகிய 4 நீதிபதிகள் இடம்பெற்று இருந்தனர். அந்த 5 நீதிபதிகள் பற்றிய விவரம் வருமாறு:–

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

ரஞ்சன் கோகாய் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் 46–வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். வருகிற 17–ந் தேதி ஓய்வு பெறுகிறார். மிகவும் அனுபவம் வாய்ந்தவரான நீதிபதி ரஞ்சன் கோகாய், 1978–ம் ஆண்டிலேயே பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்து கொண்டார்.

பஞ்சாப் கோர்ட்டிலும், அரியானா ஐகோர்ட்டிலும் நியமிக்கப்பட்டபின் அங்கேயே தலைமை நீதிபதி ஆனார். அதன்பின்னர் 2012–ல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆனார். இவர் குறிப்பிடத்தக்க சில வழக்குகளில் நீதிபதியாக இருந்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின், சி.பி.ஐ. தரப்பு விசாரணையில் ஒரு நீதிபதியாக இருந்தார். மிகவும் கண்டிப்பான நீதிபதி என்று பெயர் பெற்றவர்.

நீதிபதி எஸ்.ஏ.போப்டே

இந்த அமர்வில் உள்ள நீதிபதிகளில் முக்கியமானவர் நீதிபதி எஸ்.ஏ.போப்டே. சுப்ரீம் கோர்ட்டின் 47–வது தலைமை நீதிபதியாக விரைவில் அவர் பொறுப்பேற்க உள்ளார். இவர் மத்திய பிரதேச மாநில ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்துள்ளார்.

அதேபோல், மராட்டிய தேசிய சட்ட பல்கலைக்கழகம் மற்றும் நாக்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இவர் வேந்தராக இருக்கிறார். இந்திய மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய ஆதார் தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கிய அமர்வில் எஸ்.ஏ.போப்டே இருந்தார்.

 நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

சுப்ரீம் கோர்ட்டில் இருக்கும் நீதிபதிகளில் மிகவும் வித்தியாசமான அதிரடி தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிதான் டி.ஒய்.சந்திரசூட்.

இவர் தீர்ப்பு வழங்கும் போது பயன்படுத்தும் வாக்கியங்கள் பல தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து இருக்கிறது. இவரின் தந்தை ஒய்.வி.சந்திரசூட் நீண்ட காலம் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து சாதித்தவர். மும்பையில் பிறந்த இவர் அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார்.

ஏ.டி.எம். ஜபல்பூர் வழக்கு, அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமை என்று தீர்ப்பு வழங்கியது, ஒரே பாலின சேர்க்கை குற்றம் கிடையாது என்று தீர்ப்பு அளித்தது என்று டி.ஒய்.சந்திரசூட் பல முக்கிய வழக்குகளில் அதிரடி தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார்.

 நீதிபதி அசோக் பூ‌ஷண்

நீதிபதி அசோக் பூ‌ஷண் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இவர் மட்டுமே அயோத்தி அமர்வில் தனது சொந்த மாநிலம் தொடர்பான வழக்கை விசாரித்துள்ளார். இவர் கேரளா ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்துள்ளார்.

1979–ம் ஆண்டு முதல் சட்ட துறையில் இருக்கும் இவர், 2016–ல் இருந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருக்கிறார். இந்தியாவில் அதிக அனுபவம் வாய்ந்த நீதிபதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி அப்துல் நசீர்

 நீதிபதி அப்துல் நசீர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். 1983–ம் ஆண்டில் வக்கீலாக பதிவு செய்த இவர், 2003–ல் கர்நாடக மாநில ஐகோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2017–ல் இவர் நேரடியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு உயர்த்தப்பட்டார். ஆம், இவர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவே இல்லாமல், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்பட்டார்.

‘முத்தலாக்’ முறை குற்றம் என்று தீர்ப்பு வந்த அமர்வில் இவர் இருந்தார். இதில் 3:2 என்ற அடிப்படையில், முத்தலாக் முறை குற்றம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அப்போது முத்தலாக் முறையை குற்றம் இல்லை என்று நீதிபதி அப்துல் நசீர் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.



 


 சுப்ரீம் கோர்ட்டில் 144 தடை உத்தரவு

சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.
* சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ந் தேதி ஓய்வுபெற இருக்கும் நிலையில், அவரது தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அயோத்தி வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியது.

* நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அயோத்தியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.

* சுப்ரீம் கோர்ட்டு வளாகத்துக்கு வெளியே நேற்று காலை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

* சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முழுவதும் டெல்லி போலீஸ் மற்றும் மத்திய துணை ராணுவ போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த தீர்ப்பை வழங்கும் தலைமை நீதிபதி உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளின் வீடுகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

* காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் காலை 8 மணியில் இருந்தே பத்திரிகையாளர்கள் கோர்ட்டு வளாகத்தில் குவிய ஆரம்பித்தனர். தொலைக்காட்சி நிறுவனங்களின் படப்பிடிப்பு வாகனங்கள், கேமராக்கள் மற்றும் இதர சாதனங்கள் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் குவிந்தன.

* தலைமை நீதிபதி அமர்வு அறைக்கு வெளியே காலை 9 மணியில் இருந்தே பத்திரிகையாளர்களும் வக்கீல்களும் இந்த வழக்கு தொடர்புடைய மனுதாரர்களும் பெரும் திரளாக காத்திருந்தனர். காலை 10.20 மணிக்கு நீதிபதியின் அறை திறக்கப்பட்டதும் அனைவரும் உள்ளே நுழைவதற்கு முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோர்ட்டு அறைக்குள் நெருக்கடி ஏற்பட்டதால் பெண் நிருபர்கள் உள்ளிட்ட பலர் அறையை விட்டு வெளியேறினார்கள்.


Next Story