தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வருமா? - சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு


தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வருமா? - சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
x
தினத்தந்தி 13 Nov 2019 4:30 AM IST (Updated: 13 Nov 2019 3:43 AM IST)
t-max-icont-min-icon

தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வருமா என சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

புதுடெல்லி,

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் சொத்து விவரம் கேள்விக்குள்ளானது.

கேள்வியை எழுப்பியவர் தகவல் உரிமைச்சட்ட ஆர்வலர் எஸ்.சி. அகர்வால் ஆவார்.

இது தொடர்பான வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து, தகவல் அறியும் உரிமைச்சட்ட வரம்பின் கீழ் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் அலுவலகமும் வரும் என தீர்ப்பு வழங்கியது.

தகவல் அறியும் உரிமைச்சட்ட வரம்பின்கீழ் சுப்ரீம் கோர்ட்டு தலைமை அலுவலகத்தை கொண்டு வந்தால் அது நீதித்துறை சுதந்திரத்தை பாதித்து விடும் என்ற சுப்ரீம் கோர்ட்டு வாதத்தையும் டெல்லி ஐகோர்ட்டு நிராகரித்தது.

2010-ம் ஆண்டு, ஜனவரி 10-ந் தேதி வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு, அப்போதைய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை பதிவாளர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணை முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ந் தேதி ஓய்வு பெறுகிற நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு அதற்கு முன்னதாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) மதியம் 2 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story