வாகன கட்டுப்பாட்டு திட்டம் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்: அரவிந்த் கெஜ்ரிவால்


வாகன கட்டுப்பாட்டு திட்டம் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்: அரவிந்த் கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 13 Nov 2019 2:03 PM IST (Updated: 13 Nov 2019 2:03 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் தேவைப்பட்டால் வாகன கட்டுப்பாட்டு திட்டம் நீட்டிக்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியை ஒட்டியுள்ள  அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பது உள்ளிட்ட காரணங்களால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.  இந்த நிலையில்,  கடந்த சில நாட்களாக காற்று மாசு சற்று குறைந்திருந்த நிலையில் அது மீண்டும் உச்சத்தைத் தொடும் நிலைக்கு சென்றுள்ளது.   

இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதற்கிடையில், டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் ஒரு திட்டமாக வாகன கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், தேவைப்பட்டால் வாகன கட்டுப்பாடு திட்டம் மேலும் நீட்டிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காற்றின் தரம் இன்று காலை நிலவரப்படி 467 குறியீடு என்ற அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசின் தரக்குறியீடு, 0 - 50 புள்ளிகள் வரை இருந்தால், ஆபத்தில்லை என கருதப்படுகிறது. அது, 201 - 400 புள்ளிகள் வரை இருந்தால் மிக மோசமான நிலை என்றும், 500 புள்ளிகளை தாண்டினால் அதிதீவிர அபாய நிலை என்றும் குறிப்பிடப்படுகிறது.  கடந்த 2-ம் தேதியன்று டெல்லியில் காற்று மாசின் தரக்குறீயீடு அளவு, 533 புள்ளிகள் என்ற அதிதீவிர அபாய கட்டத்தை தொட்டது. 

Next Story