தேசிய செய்திகள்

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி: சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி; குறைந்தபட்ச செயல் திட்டம் தயாரானது + "||" + Coalition rule with Congress and Nationalist Congress support: First-ministerial post for Shiv Sena; The minimum action plan is ready

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி: சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி; குறைந்தபட்ச செயல் திட்டம் தயாரானது

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி: சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி; குறைந்தபட்ச செயல் திட்டம் தயாரானது
மராட்டியத்தில் 3 கட்சிகள் அமைக்கும் அரசில் சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசில் செயல்படுத்த வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டம் தயாராகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவை தொடர்ந்து எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால் கடந்த செவ்வாய்க்கிழமை மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பாரதீய ஜனதாவுடன் கூட்டணியை முறித்து கொண்ட சிவசேனா எதிரணியை சேர்ந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் முயற்சியில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.


புதிய அரசை அமைப்பதற்கு 3 கட்சிகளும் குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுக்க பேச்சுவார்த்தை நடத்தின. கட்சிகள் இடையேயான அதிகார பகிர்வு குறித்தும் பேசப்பட்டது.

இந்தநிலையில், 3 கட்சிகள் சேர்ந்து அமைக்கும் புதிய அரசில் முதல்-மந்திரி பதவி சிவசேனாவுக்கு தான் என தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கூட்டணி அரசில் முதல்-மந்திரி பதவி சிவசேனாவுக்கு வழங்கப்படும். அந்த பதவி தொடர்பான பிரச்சினையில் தான் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது. இதனால் அந்த கட்சியின் உணர்வை மதிக்க வேண்டியது எங்கள் பொறுப்பு. புதிய அரசின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த காங்கிரஸ் கட்சியும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே கூட்டணி அரசில் செயல்படுத்த வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டம் இறுதி வடிவம் பெற்று இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உருவாக்கி உள்ள குறைந்தபட்ச செயல்திட்டத்தில் விவசாயிகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்ச செயல் திட்டம் 3 கட்சிகளின் உயர்மட்ட குழுவால் அங்கீகரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.

இதில் எந்தவொரு பிரச்சினையையும் சேர்ப்பது அல்லது நீக்குவது குறித்து ஏதேனும் ஆலோசனை வழங்கப்பட்டால் 3 கட்சிகளிடையே மற்றொரு கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் தரப்பில் குறைந்தபட்ச செயல்திட்டம் மீது சோனியா காந்தி முடிவு எடுப்பார் என காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்ராவ் தாக்கரே கூறினார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளார்.

அப்போது மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ள 3 கட்சியின் தலைவர்களும் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு கவர்னரை சந்தித்து பேசுகிறார்கள்.

ஆட்சி அமைக்க அவர்கள் உரிமை கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், விவசாயிகள் பிரச்சினை குறித்து கவர்னரிடம் பேச இருப்பதாக அக்கட்சிகள் அறிவித்து உள்ளன.

‘விரைவில் ஆட்சி அமைப்போம்’ - பா.ஜனதா திடீர் அறிவிப்பு

மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் பாரதீய ஜனதா விரைவில் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் நேற்று திடீரென கருத்து தெரிவித்தார். இதுபற்றி நிருபர்களை சந்தித்த அவர், ‘மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு 1 கோடியே 42 லட்சம் வாக்குகள் கிடைத்தது. நாங்கள் தான் நம்பர் 1 ஆக இருக்கிறோம். சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுடன் சேர்த்து எங்களுக்கு 119 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. எனவே விரைவில் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கும். ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’ என்றார்.

முன்னதாக மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய மந்திரி நிதின் கட்காரி நிருபர்களிடம் கூறுகையில், ‘கிரிக்கெட் விளையாட்டை போல தான் அரசியலும், கடைசி நேரத்திலும் எதுவும் நடக்கலாம். நீங்கள் தோற்றுவிடுவீர்கள் என்று நினைப்பீர்கள். ஆனால் முடிவு தலைகீழாக இருக்கும்’ என்றார்.

ஆட்சி அமைப்பதற்காக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பாரதீய ஜனதா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் பாரதீய ஜனதா தலைவர்களின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், பாரதீய ஜனதாவுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்று சரத்பவார் மறுத்தார். சிவசேனா, காங்கிரசுடன் மட்டுமே பேசி வருவதாகவும் அவர் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. உன்னாவ் விவகாரம் - காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து வெளிநடப்பு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் எரிக்கப்பட்டதைக் கண்டித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
2. காங்கிரசுடன் கரம் கோர்த்த காவி: அரசியலில் புதிய சகாப்தம்
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை எனும் கூற்று, மராட்டிய அரசியல் களத்தில் வலுவாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.
3. மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி நீடிக்காது சேலத்தில் கே.வி.தங்கபாலு பேட்டி
மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி நீடிக்காது என சேலத்தில் கே.வி.தங்கபாலு கூறினார்.
4. நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை வீழ்த்துவோம்: காங்கிரஸ் உறுதி
மராட்டியத்தின் அரசியல் வரலாற்றில் இன்று கருப்பு நாள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கடுமையாக சாடியுள்ளார்.
5. தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா வேட்டையாடி விடும் என சிவசேனா பயப்படுகிறது; காங்கிரஸ் சொல்கிறது
தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா வேட்டையாடி விடும் என்று சிவசேனா பயப்படுகிறது என மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் கூறியுள்ளார்.