டெல்லியில் சோனியா காந்தியுடன் சரத்பவார் சந்திப்பு: “மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது பற்றி பேசவில்லை” என்று பேட்டி


டெல்லியில் சோனியா காந்தியுடன் சரத்பவார் சந்திப்பு: “மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது பற்றி பேசவில்லை” என்று பேட்டி
x
தினத்தந்தி 18 Nov 2019 2:14 PM GMT (Updated: 18 Nov 2019 7:44 PM GMT)

டெல்லியில், சோனியா காந்தியை சரத்பவார் சந்தித்து பேசினார். மராட்டியத்தில் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது குறித்து பேசவில்லை என அவர் கூறினார்.

புதுடெல்லி,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலுக்கு பின்னர் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் போனதை அடுத்து, கடந்த 12-ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. முதல்-மந்திரி பதவி கேட்டு பாரதீய ஜனதாவிடம் உறவை முறித்துக்கொண்ட சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.

சிவசேனாவுடன் கைகோர்ப்பதற்கு முதலில் தயங்கிய இரு கட்சிகளும் பின்னர் சம்மதித்தன. ஆட்சி அமைப்பதற்காக 3 கட்சி தலைவர்களும் நேரில் சந்தித்து பேசினர்.

3 கட்சிகளின் ஆட்சி அமைக்கும் நகர்வுகள் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்று இதுதொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச சரத்பவார் டெல்லி சென்றார்.

அப்போது அவரிடம் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கப்போவதாக சிவசேனா கூறி வருகிறது, அது எவ்வாறு செல்கிறது? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதில் அளித்த சரத்பவார், மராட்டியத்தில் ஆட்சி அமைக்க விரும்பும் அனைத்து கட்சிகளும் தங்களுக்கான பாதையை தேர்வு செய்து கொள்ளவேண்டும். சிவசேனா-பாரதீய ஜனதா இணைந்து தேர்தலை சந்தித்தார்கள். தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்தோம். அவர் கள், அவர்களின் வழியில் அரசியல் செய்யட்டும். நாங்கள் எங்கள் வழியில் அரசியல் செய்கிறோம் என்று கூறினார்.

சரத்பவாரின் இந்த கருத்தால் மராட்டிய அரசியலில் மீண்டும் குழப்படியான சூழல் உண்டானது. இந்தநிலையில், நேற்று மாலை சோனியா காந்தியை டெல்லியில் உள்ள இல்லத்தில் சரத்பவார் சந்தித்து பேசினார். சுமார் 50 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்கு பின்னர் சரத்பவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டியத்தில் தற்போது நிலவும் அரசியல் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதுதொடர்பாக இருவரும் விரிவாக ஆலோசித்தோம்.

மராட்டியத்தில் உள்ள தற்போதைய அரசியல் சூழல் குறித்து சோனியா காந்தியிடம் விளக்கினேன். ஆனால் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக எதுவும் பேசவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


இதற்கிடையே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஓரிரு நாளில் டெல்லியில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவாதிப்போம் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்தநிலையில், ‘கவலைப்படாமல் இருங்கள், எல்லாம் சரியாகிவிடும். மராட்டியத்தில் மீண்டும் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி அமையும்’ என அமித்ஷா தன்னிடம் கூறியதாக மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

இதனால் மராட்டியத்தில் புதிய ஆட்சி அமைவதில் தொடர்ந்து தாமதமும், குழப்பமான சூழலும் நீடிக்கிறது.


Next Story