தேசிய செய்திகள்

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + Supreme Court directs Pon.Manickavel to hand over idolatrous documents to ADGP

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
புதுடெல்லி,

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை உயரதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அவர் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கும் தடை விதிக்கப்பட்டது.


கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 30-ந் தேதி ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் மேலும் ஒரு ஆண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பணி நீட்டிப்பு கடந்த மாதம் 30-ந் தேதியுடன் முடிவடைவதால் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை உயரதிகாரியிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. மேலும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசுக்கு எதிராக பொன் மாணிக்கவேல் தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூடுதல் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அசோக்பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, ஜெயந்த்பூஷண், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன், அரசு வக்கீல் பா.வினோத்கன்னா ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தரப்பில் வக்கீல் சாய்தீபக், ஐகோர்ட்டில் மனுதாரராக இருந்த யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி தரப்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி, வக்கீல்கள் முத்துக்குமார், ஆனந்த் ஆகியோர் ஆஜரானார்கள்.

வழக்கு விசாரணையின்போது பொன் மாணிக்கவேல், கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டு ராஜேஸ்வரி ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் வருமாறு:-

சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அரசிடமோ மேலதிகாரிகளிடமோ ஒப்படைக்கவில்லை. இது மிகப்பெரும் விதிமீறல். சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் 70 அதிகாரிகளில் 51 அதிகாரிகள் அவருக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அவருடைய பதவி நீட்டிப்பு கடந்த மாதம் 30-ந் தேதியுடன் முடிவடைந்தது. முக்கியமான ஆவணங்களை அவர் தன்னிடம் வைத்துக் கொள்ள முடியாது, மூத்த அதிகாரியிடம் ஒப்படைத்துத்தான் ஆகவேண்டும். ஆனால் அவர் அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்கிறார். அவர் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டார். எனவே அவர் இனியும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக தொடரக்கூடாது. நாங்களே வேறு ஒரு அதிகாரியை நியமிக்கிறோம். இவ்வாறு வாதாடப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், காணாமல்போன சிலைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு கிடையாது. சென்னை ஐகோர்ட்டுக்கு இருந்தது. அதனால்தான் பொன் மாணிக்கவேலை நியமித்து அவரது செயல்பாடுகளை அவர்களே கண்காணித்தனர். ஆனாலும் தொடர்ந்து அவருக்கு தொல்லைகள் கொடுத்ததால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது என விளக்கம் அளித்தனர்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு, பணி எப்போது நீட்டிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறியுள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலை வரும்போது ஒரு அதிகாரியின் அவசியம் கட்டாயம் தேவை என அரசு கருதும்போது பணி நீட்டிக்கலாம் என கூறியிருக்கிறது. இந்த விவகாரம் அப்படி இல்லை. எனவே பொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்பு அவசியம் இல்லை என தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டில் பொன் மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் பொன் மாணிக்கவேல் அனைத்து ஆவணங்களையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பொன் மாணிக்கவேலுக்கு பணி நீடிப்பு வழங்குவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டே முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

பணி நீட்டிப்பு வழங்க கூடாது என தமிழக அரசு தொடர்ந்த மனு மீது பதில் அளிக்குமாறு பொன் மாணிக்கவேல், டிராபிக் ராமசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொன் மாணிக்கவேல் தரப்பில், ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்காமல் ஐகோர்ட்டில் ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஊர்வலம் சென்ற ஆயுதப்படை போலீஸ்காரரின் ஊதிய உயர்வை ரத்து செய்தது சரி; ஐகோர்ட்டு உத்தரவு
கோவை ஆயுதப்படை போலீசார் கமிஷனர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்ற சம்பவத்தில், போலீஸ்காரருக்கு 2 ஆண்டு ஊதிய உயர்வை ரத்து செய்ய போலீஸ் கமிஷனர் கூறியது சரியானது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. நடிகை கங்கனா போதை பொருளை பயன்படுத்தினாரா? விசாரணை நடத்த போலீசாருக்கு அரசு உத்தரவு
நடிகை கங்கனா தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
3. முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் ரூ.500 அபராதம் தானே மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தானே மாநகராட்சி கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
4. போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகைகள் ராகிணி, சஞ்சனாவுக்கு மேலும் 3 நாட்கள் போலீஸ் காவல் கோர்ட்டு உத்தரவு
போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகைகள் ராகிணி, சஞ்சனாவுக்கு மேலும் 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. வாரிசு வேலை வழங்காவிட்டால் கலெக்டர் ஊதியத்தில் பிடித்தம்; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
வாரிசு வேலை வழங்காவிட்டால் கலெக்டர் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.