அமலாக்கப்பிரிவு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது - திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலை


அமலாக்கப்பிரிவு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது - திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலை
x
தினத்தந்தி 5 Dec 2019 5:45 AM IST (Updated: 5 Dec 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரத்தை, சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் நேற்று ஜாமீனில் விடுதலை செய்தது. இதைத்தொடர்ந்து, 106 நாட்களுக்கு பிறகு அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

புதுடெல்லி,

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தன.

சி.பி.ஐ. வழக்கில் கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் அக்டோபர் 22-ந் தேதி ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே, இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அக்டோபர் 16-ந் தேதி ப.சிதம்பரத்தை கைது செய்தனர். இதனால் சி.பி.ஐ. வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும் அவரால் சிறையில் இருந்து வெளியே வரமுடியவில்லை

இந்த நிலையில் அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஐகோர்ட்டு நவம்பர் 15-ந் தேதி அவரது மனுவை தள்ளுபடி செய்து, அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, தயான் கிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். அமலாக்கப்பிரிவு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.நட்ராஜ் ஆகியோர் வாதாடினார்கள். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நவம்பர் 28-ந் தேதியன்று நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் நேற்று ப.சிதம்பரத்துக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி தீர்ப்பு கூறினார்கள்.

தீர்ப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை ஏற்று, கடந்த நவம்பர் 15-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்படுகிறது.

* தனிக்கோர்ட்டு நீதிபதி முன்பு ரூ.2 லட்சம் சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனும் வழங்கி அவர் ஜாமீனில் விடுதலை ஆகலாம்.

* சி.பி.ஐ. வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்ட ப.சிதம்பரத்தின் பாஸ்போர்ட்டை, சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு தன்வசம் தொடர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* ப.சிதம்பரம் தனிக்கோர்ட்டின் அனுமதி இன்றி வெளிநாடு செல்லக்கூடாது.

* எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போது அவர் அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

* ஆதாரங்களையும், சாட்சியங்களையும் கலைக்கக்கூடாது. சாட்சிகளின் மீது செல்வாக்கு செலுத்தவோ, மிரட்டவோ கூடாது.

* தன் மீதும், இதர குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதும் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவோ அல்லது இது தொடர்பாக பொதுவெளியில் கருத்து தெரிவிக்கவோ கூடாது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் மேலும் கூறி இருப்பதாவது:-

பொருளாதாரம் தொடர்பான குற்றங்கள் இந்த சமூகம் முழுவதையும் பாதிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆழமான கூட்டுச்சதியின் விளைவால் ஏற்படும் இந்த குற்றங்கள் மிகவும் தீவிரத்தன்மை கொண்டவை என்பதை சுப்ரீம் கோர்ட்டு எப்போதும் வலியுறுத்தி இருக்கிறது. இதுபோன்ற குற்றங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை பற்றி, ஜாமீன் வழங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் மற்றொரு வகையில் பொருளாதார குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரேயடியாக ஜாமீன் மறுக்கும் வகையில் சட்டம் இல்லை. தீவிரமான பொருளாதார குற்றம் நிகழ்ந்துள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டாலும் எல்லா வழக்கிலும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று விதிமுறைகள் எதுவும் இல்லை. ஏனென்றால் இது தொடர்பாக இயற்றப்பட்ட சட்டங்களில் அதுபோன்ற தடை எதுவும் இல்லை.

ஜாமீன் கோரும் ஒவ்வொரு வழக்கிலும் அந்தந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அளவிட வேண்டும். பொருளாதார குற்றங்கள் தொடர்பான வழக்குகளில், கோர்ட்டுகள் கண்ணை மூடிக்கொண்டு ஒரே மாதிரியான அளவீடுகளைக் கொண்டு மதிப்பிட முடியாது.

குற்றம் சாட்டப்பட்டவர் 45 நாட்களுக்கும் மேலாக அமலாக்கப்பிரிவின் காவலில் இருந்து இருக்கிறார். தேவைப்பட்ட போது விசாரணைக்கும் தயாராக இருந்திருக்கிறார். இருந்தாலும் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம் தொடர்பாக அவரிடம் பிரத்யேகமாக விசாரிக்க வேண்டியிருப்பதாக கூறி அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு அமலாக்கப்பிரிவு ஆட்சேபணை தெரிவித்தது.

அவர் சாட்சியங்களை கலைப்பார் என்றும், சாட்சிகளை மிரட்டுவார் என்றும் அமலாக்கப்பிரிவு கூறுவதை ஏற்க முடியாது. ஏனென்றால் அவர் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. எந்த அரசு பதவியிலும் இல்லை. வழக்கில் ஒருவர் சாட்சியம் அளிக்க ஒத்துழைக்கவில்லை அல்லது மறுத்தார் என்றால் அதற்காக குற்றம் சாட்டப்பட்டவர் மீது பழி கூற முடியாது.

மனுதாரர் (ப.சிதம்பரம்) 74 வயதானவர். சிறையில் இருந்தபோது இருமுறை நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். அவருக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் அளிக்கப்பட்டன. இதுபோன்ற சூழ்நிலையில் அவரை விசாரணைக்கு உட்படுத்துவது எந்த வகையிலும் தடைபடாது. ஏற்கனவே அவர் வெளிநாடு தப்பிச்செல்லும் ஆபத்து இல்லை என்பதும், சாட்சியங்களை கலைக்க மாட்டார் என்பதும் ஏற்கப்பட்டு உள்ளது. மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் அவருக்கு ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்ததை ஏற்க முடியாது. இது நியாயமான விசாரணைக்கு எதிரானது ஆகும்.

இதுபோன்ற சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் ஏற்கனவே ப.சிதம்பரம் சிறையில் இருந்த நாட்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவரை ஜாமீனில் விடுவிக்கலாம் என்று இந்த கோர்ட்டு கருதுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, ப.சிதம்பரத்தின் சார்பில் தனிக்கோர்ட்டில் ஜாமீன் உத்தரவாதம் வழங்கப்பட்டது. அது தொடர்பான நடவடிக்கைகள் முடிவடைந்ததை தொடர்ந்து, இரவு 8.10 மணிக்கு ப.சிதம்பரம் திகார் சிறையில் இருந்து 106 நாட்களுக்கு பிறகு விடுதலையாகி 3-வது நுழைவாயில் வழியாக வெளியே வந்தார்.

அங்கு அவரை வரவேற்பதற்காக ஏராளமான காங்கிரசார் நீண்ட நேரம் காத்து நின்றனர். அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் வந்து இருந்தார். பத்திரிகையாளர்களும் திரண்டு இருந்தனர்.

ப.சிதம்பரம் வெளியே வந்ததும் காங்கிரசார் மாலை அணிவித்து அவரை வரவேற்றனர். அவர்களை பார்த்து ப.சிதம்பரம் மகிழ்ச்சியுடன் கை அசைத்தார்.

அப்போது, அவர் விடுதலையானது குறித்து அவரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு அவர் கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு நான் கீழ்ப்படிய வேண்டும் என்பதால் வழக்கு பற்றி கருத்து எதுவும் தெரிவிக்கக்கூடாது. என்றாலும், 106 நாட்கள் நான் சிறையில் இருந்துள்ள போதிலும் என் மீது ஒரு குற்றச்சாட்டு கூட பதிவு செய்யப்படவில்லை” என்றார்.

கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் பேசுகையில், தனது தந்தை தேவை இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அவர் ஜாமீனில் விடுதலையானது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

அதன்பிறகு ப.சிதம்பரம் காரில் ஏறி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.


Next Story