கற்பழிப்பு குற்றவாளிகள் சுட்டுக்கொலை: தேசிய மனித உரிமை ஆணைய குழு சம்பவ இடத்தில் விசாரணை


கற்பழிப்பு குற்றவாளிகள் சுட்டுக்கொலை: தேசிய மனித உரிமை ஆணைய குழு சம்பவ இடத்தில் விசாரணை
x
தினத்தந்தி 8 Dec 2019 3:45 AM IST (Updated: 8 Dec 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

பெண் டாக்டரை கற்பழித்து கொன்ற குற்றவாளிகள் 4 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர் சம்ஷாபாத்தை சேர்ந்த பெண் டாக்டர் 4 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சாத்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர்கள் முகமது ஆரிப், சென்னகேசவலு, கிளனர்கள் சிவா, நவீன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

சம்பவம் நடந்த சத்தப்பள்ளி என்ற இடத்தில் சம்பவம் பற்றி நடித்துக்காட்டுவதற்காக குற்றவாளிகளை போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் திடீரென போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாக கூறி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 4 பேரும் குண்டு காயம் அடைந்து பலியானார்கள்.

கற்பழிப்பு குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு நாடு முழுவதும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. தெலுங்கானா மக்கள் பட்டாசு வெடித்தும், போலீசார் மீது பூக்களை தூவியும் வரவேற்றனர்.

இதுபற்றி தேசிய மனித உரிமை ஆணையம் கூறும்போது, “போலீஸ் காவலில் இருந்த 26 வயதுக்குட்பட்ட 4 பேர் என்கவுண்ட்டர் என்ற பெயரில் சுட்டுக்கொல்லப்பட்டது வருத்தத்துக்குரிய பிரச்சினைதான்” என்று தெரிவித்துள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையம் 4 குற்றவாளிகளை சுட்டுக்கொன்றதை ஒரு சுய வழக்காக எடுத்துக்கொண்டது. இதுபற்றி விசாரணை நடத்த மூத்த போலீஸ் அதிகாரி தலைமையிலான ஒரு நிபுணர் குழுவையும் ஐதராபாத்துக்கு அனுப்பியது.

அந்த குழுவினர் நேற்று ஐதராபாத் வந்து சேர்ந்தனர். முதலில் அந்த குழுவினர் தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவுப்படி 4 பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மெஹபூப்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு 4 பேரின் உடல்களையும் அவர்கள் பார்வையிட்டனர். என்கவுண்ட்டர் நடைபெற்ற சாத்தப்பள்ளிக்கும் குழுவினர் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு விளக்கம் கேட்டு தெலுங்கானா போலீசாருக்கு நோட்டீசும் அனுப்பினர். குழுவினர் விசாரணை முடிந்ததும் இதுதொடர்பாக ஒரு அறிக்கை அளிப்பார்கள் என தெரிகிறது.

இதற்கிடையே போலீசாரின் துப்பாக்கியை பறித்தது, அவர்களை தாக்கியது தொடர்பாக கொல்லப்பட்ட 4 குற்றவாளிகள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். என்கவுண்ட்டர் நடத்திய போலீஸ் குழுவின் பொறுப்பாளர் அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி, ஆயுதங்கள் சட்டம் உள்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story