திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பூந்தி தயாரிக்கும் கூடத்தில் திடீர் தீ விபத்து


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பூந்தி தயாரிக்கும் கூடத்தில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 8 Dec 2019 4:02 PM IST (Updated: 9 Dec 2019 4:10 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் லட்டுக்கு பூந்தி தயாரிக்கும் கூடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

திருமலை,

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் அருகில் பூந்தி தயாரிப்பு கூடம் உள்ளது. அந்த கூடத்தில் பெரிய எண்ணெய் சட்டிகளுடன் கூடிய கியாஸ் ஸ்டவ் அடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை 11 மணியளவில் ஊழியர்கள் பூந்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு எண்ணெய் சட்டி திடீரென தீப்பிடித்து எரிந்ததாக தெரிகிறது. உடனே ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதையடுத்து கியாஸ் வினியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால் உள்ளே தீ எரிந்து கொண்டிருந்தது.

தகவல் அறிந்ததும் தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் கூறியதாவது:-

பூந்தி தயாரிக்கும் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்து சாதாரணமாக நடக்கக்கூடியது தான். தீ விபத்தால், எந்தப்பொருளுக்கும் சேதம் ஏற்படவில்லை. ஊழியர் ஒருவர் நெய் ‘டின்’னை எடுத்து, எண்ணெய் சட்டியில் நெய்யை ஊற்றியபோது, அவரின் கையில் இருந்த நெய் ‘டின்’ திடீரென தவறி விழுந்தது.

நெய் சிந்தியதால், அடுப்பில் எரிந்த தீ, கீழே சிந்திய நெய்யில் பிடித்து எரிய தொடங்கியது. உடனே அங்கிருந்த ஊழியர்கள் தீயை அணைத்துள்ளனர். தீயணைப்புப்படை வீரர்களும் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். பின்னர் பூந்தி தயாரிக்கும் கூடம் சுத்தம் செய்யப்பட்டு, 20 கியாஸ் ஸ்டவ் அடுப்புகளில் பூந்தி தயாரிக்கும் பணி மீண்டும் தொடங்கியது. இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story