குடியுரிமை மசோதா : காலையில் விமர்சனம், மாலையில் ஆதரவு- சிவசேனா அந்தர் பல்டி!!


குடியுரிமை மசோதா : காலையில் விமர்சனம், மாலையில் ஆதரவு- சிவசேனா அந்தர் பல்டி!!
x
தினத்தந்தி 10 Dec 2019 5:31 AM GMT (Updated: 10 Dec 2019 10:21 AM GMT)

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக சிவசேனா சாம்னாவில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தது.

மும்பை,

2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நேற்று பாராளுமன்ற  மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்குள்ளானது.  

மக்களவையில் நடைபெற்ற 9 மணி நேர காரசார விவாதத்திற்கு பிறகு,  311 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.  குடியுரிமை திருத்த மசோதாவிற்கு,  பாஜக, அதிமுக, அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன.

மராட்டிய தேர்தல் முடிவுக்கு பிறகு அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்த சிவசேனா, குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவு அளித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, நேற்று காலை சிவசேனா தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில்  குடியுரிமை மசோதாவை கடுமையாக விமர்சித்து இருந்தது.  கண்களுக்குப் புலப்படாத வகையில் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதத்தை முன்னெடுக்கிறது இந்த மசோதா  என மத்திய அரசை சிவசேனா விமர்சித்து இருந்தது. ஆனால், மாலையில் மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக சிவசேனா வாக்களித்துள்ளது. 

மாறுபட்ட நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்த சிவசேனா எம்.பி அரவிந்த் சாவந்த்,  நாட்டு நலன் கருதியே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு நாங்கள் ஆதரவு அளித்தோம்.  குறைந்தபட்ச பொது செயல் திட்டம் மராட்டியத்துக்கு மட்டுமே பொருந்தும்” என்றார். சிவசேனாவின் இந்த நிலைப்பாடு மராட்டியத்தில் , சிவசேனா அரசுக்கு ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story