பாலியல் குற்றங்களுக்கு 21 நாட்களில் தண்டனை புதிய சட்டம் - ஜெகன் மோகன் ரெட்டி உறுதி


பாலியல் குற்றங்களுக்கு 21 நாட்களில் தண்டனை புதிய சட்டம்  - ஜெகன் மோகன் ரெட்டி உறுதி
x
தினத்தந்தி 10 Dec 2019 11:58 AM IST (Updated: 10 Dec 2019 11:58 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் குற்றங்களுக்கு 21 நாட்களில் தண்டனை வழங்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதி அளித்துள்ளார்.

விசாகபட்டினம்

தெலுங்கானா மாநிலம் சைபராபாத்தில்  பாலியல் பலாத்கார குற்றவாளிகள் 4  பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வரவேற்றுள்ளார். ஆந்திர சட்டசபை குளிர்கால கூட்டத்தில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:-

ஒட்டுமொத்த சமூகமும் வெட்கத்துடன் தலைகுனிய வேண்டிய ஒரு சம்பவம் இது.  26 வயதான ஒரு பெண் மருத்துவர் முன் திட்டமிட்ட முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவம் நடக்கும்போது, ஒருவர் எவ்வாறு  நடந்து கொள்ள வேண்டும்? காவல்துறை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? அரசியல்வாதிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

இதேபோன்ற சம்பவம் நம் மாநிலத்தில் நடந்தால், நாமும் நமது  காவல்துறையும் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் டிவியில் பார்த்த பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரின் வலியைப் பார்த்த பிறகு, நாம்  அனைவரும்  குற்றவாளிகள்  சுட்டுக் கொல்லப்பட்டாலும் அது தவறல்ல என்று நினைத்தோம். 

பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் ஒரு சட்டம் கொண்டு வரப்படும், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் ."பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஒரு வாரத்தில் முடிக்கப்பட வேண்டும், மேலும் குற்றவாளிகளுக்கு மூன்று வாரங்களுக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கூறினார்.

Next Story