திருச்சி சிவாவுக்கு சிறந்த எம்.பி. விருது - வெங்கையா நாயுடு வழங்கினார்


திருச்சி சிவாவுக்கு சிறந்த எம்.பி. விருது - வெங்கையா நாயுடு வழங்கினார்
x
தினத்தந்தி 10 Dec 2019 8:27 PM GMT (Updated: 2019-12-11T01:57:33+05:30)

திருச்சி சிவாவுக்கு சிறந்த எம்.பி.க்கான விருதினை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.

புதுடெல்லி,

மராட்டிய மாநில முன்னணி மீடியா குழுமமான ‘லோக்மத்’ சார்பில், சிறந்த எம்.பி.க்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நேற்று நடந்தது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.

இதில் சிறந்த மாநிலங்களவை எம்.பி. விருது திருச்சி சிவாவுக்கும், சிறந்த மக்களவை எம்.பி. விருது முன்னாள் மத்திய மந்திரி சாகத் ராய்க்கும் வழங்கப்பட்டது. மேலும், மக்களவை சிறந்த பெண் எம்.பி விருது சுப்ரியாசுலேக்கும், மாநிலங்களவை சிறந்த பெண் எம்.பி. விருது விப்லப் தாகூருக்கும் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு சிறந்த பெண் எம்.பி. விருதை கனிமொழி பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சிறந்த நாடாளுமன்றவாதி வாழ்நாள் சாதனையாளர் விருது சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அந்த கட்சி எம்.பி. ஜெயாபச்சன் பெற்றுக்கொண்டார்.

விழாவில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர்ரஞ்சன் சவுத்ரி, மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் சி.காஷ்யப், லோக்மத் மீடியா குழும தலைவர் விஜய் தர்டா, கனிமொழி எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story