ஆதார் இல்லாததற்காக ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


ஆதார் இல்லாததற்காக ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 10 Dec 2019 10:30 PM GMT (Updated: 2019-12-11T02:55:36+05:30)

ஆதார் எண் இல்லாததற்காக, ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் 86 சதவீத ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டது. ரேஷன் கடைகளில் உள்ள பாயிண்ட் ஆப் சேல் கருவியில் ஆதார் எண் அடிப்படையில் பயனாளிகளின் அடையாளம் உறுதி செய்யப்படுகிறது.

சரியான நபர்களுக்கு பொது வினியோக பலன்கள் சென்றடைவதை ஆதார் அடையாளம் உறுதி செய்கிறது. நாட்டில் மொத்தம் உள்ள 5 லட்சத்து 35 ஆயிரம் ரேஷன் கடைகளில், 4 லட்சத்து 58 ஆயிரம் கடைகளில் ஆதாரை அடையாளம் காணும் பாயிண்ட் ஆப் சேல் கருவிகள் உள்ளன.

ரேஷன் கார்டுதாரர்கள் யாருக்காவது ஆதார் இல்லாவிட்டாலோ அல்லது பாயிண்ட் ஆப் சேல் கருவியில் அடையாளம் காண்பதில் தவறு ஏற்பட்டாலோ, உணவு தானியங்கள் பெறுவதற்கு மாற்று வழிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

எனவே, ஆதார் இல்லாததற்காக, யாருக்கும் உணவு தானியங்கள் வழங்க மறுக்கக்கூடாது என்றும், ரேஷன் கார்டு தகவல் தொகுப்பில் இருந்து சம்பந்தப்பட்ட குடும்பத்தின் பெயரை நீக்கக்கூடாது என்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story