உண்ணாவிரத போராட்டத்தில் மயக்கம்; சுவாதி மலிவாலுக்கு ஐ.சி.யூ.வில் சிகிச்சை


உண்ணாவிரத போராட்டத்தில் மயக்கம்; சுவாதி மலிவாலுக்கு ஐ.சி.யூ.வில் சிகிச்சை
x
தினத்தந்தி 15 Dec 2019 5:14 AM GMT (Updated: 15 Dec 2019 5:14 AM GMT)

கற்பழிப்பு வழக்குகளில் 6 மாதங்களில் மரண தண்டனை வழங்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி மகளிர் ஆணைய தலைவி மயக்கம் அடைந்துள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்கள் பற்றிய வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும் திசா மசோதாவை நாடு முழுவதும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி மகளிர் ஆணைய தலைவியான சுவாதி மலிவால் கடந்த 3ந்தேதி டெல்லி ராஜ்காட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து கடந்த 12 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அவரது உடல் எடை 7 முதல் 8 கிலோ வரை குறைந்துள்ளது.  அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடல்நிலையை கவனத்தில் கொண்டு போராட்டத்தினை கைவிடும்படி அவரிடம் கேட்டு கொண்டனர்.

எனினும் அதற்கு அவர் ஒப்பு கொள்ளவில்லை.  அவரது உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது.  இதனிடையே, திசா மசோதாவை கொண்டு வந்ததற்காக ஆந்திர பிரதேச முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்து மலிவால் கடிதமும் எழுதியுள்ளார்.

13 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்த நிலையில் திடீரென இன்று காலை 7 மணியளவில் அவர் மயக்கம் அடைந்து உள்ளார்.  இதனால் அவரை டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அவர் ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story