உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க. கோர்ட்டு அவமதிப்பு வழக்கு


உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க. கோர்ட்டு அவமதிப்பு வழக்கு
x
தினத்தந்தி 16 Dec 2019 8:33 PM GMT (Updated: 16 Dec 2019 8:33 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருக்கிறது.

புதுடெல்லி,

தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. சார்பில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது தொடர்பான மனுவை தி.மு.க. சார்பில் வக்கீல் அமித் ஆனந்த் திவாரி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 6 மற்றும் 12-ந்தேதிகளில் பிறப்பித்த உத்தரவை மாநில தேர்தல் ஆணையமும், தொகுதி மறுவரையறை ஆணையமும் பின்பற்றவில்லை.

உள்ளாட்சி தேர்தலை நடத்த அனுமதி வழங்கி கடந்த 6-ந்தேதி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, 9 மாவட்டங்களை தவிர்த்து மீதம் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் (வார்டு இடஒதுக்கீடு மற்றும் சுழற்சி முறை) சட்டம் 1995-ன் அடிப்படையில் அனைத்து மட்டத்திலும் சரியான விகிதத்தில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறியது. இதைத்தொடர்ந்து தேர்தலை நடத்துவது தொடர்பான புதிய அறிவிப்பாணையை 7-ந்தேதி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்த அறிவிப்பாணை, 6-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் உள்ள அம்சங்களை நிறைவேற்றும் வகையில் அமையவில்லை. பெண்கள் மற்றும் பட்டியல் இனத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உத்தரவை மாநில தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை.

எனவே மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி, தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story