குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 18 மனுக்கள் - நாளை விசாரணை


குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 18 மனுக்கள் - நாளை விசாரணை
x
தினத்தந்தி 16 Dec 2019 10:45 PM GMT (Updated: 16 Dec 2019 9:46 PM GMT)

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 18 மனுக்கள் மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.

புதுடெல்லி,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.

அவர்களுக்கு குடியுரிமை வழங்கினால் தங்கள் தனித்துவம் மற்றும் கலாசாரம் பாதிக்கப்படும் என்று அசாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்காளத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த போராட்டம் தலை நகர் டெல்லிக்கும், பிற மாநிலங்களுக்கும் பரவி உள்ளது.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன.

இந்த நிலையில், குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா, திரிபுராவின் முன்னாள் மகாராஜா பிரத்யோத் கிஷோர் தேவ் வர்மன், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் எம்.எல்.சர்மா ஆகியோர் சார்பிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம், ரிகாய் மஞ்ச் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.ஜி.மவுரியா இந்த மனுவை தாக்கல் செய்து இருக்கிறார்.

அந்த வகையில் மொத்தம் 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

அந்த மனுக்களில், குடியுரிமை சட்ட திருத்தம் அரசியல் சாசனம் வழங்கியுள்ள சம உரிமைக்கும் மற்றும் மதச்சார்பின்மைக்கும் எதிரானது என்றும், எனவே இந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மூத்த வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோர் ஆஜராகி, குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனுவை அவசர வழக்காக கருதி உடனே விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.

அதற்கு நீதிபதிகள், இந்த பிரச்சினை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 18 மனுக்களும் புதன்கிழமை (நாளை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

Next Story