”ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை நினைவு படுத்துகிறது” மாணவர்கள் மீதான தடியடி குறித்து உத்தவ் தாக்கரே கருத்து

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை நினைவுபடுத்துவதாக உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை,
டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதுடன் கண்ணீர்புகை குண்டுகளையும் வீசினர். அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தனர். போலீசாரின் இந்த அத்துமீறலை கண்டித்து நேற்று பல்கலைக்கழகம் முன்பு டெல்லியில் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மராட்டிய மாநில சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை ஆகியவை தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடினார். உத்தவ் தாக்கரே கூறுகையில், “மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி எனக்கு ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை நினைவு படுத்தியது. இளைஞர்கள் சக்தி வெடிகுண்டு போன்றது. அதை பற்ற வைத்து விடாதீர்கள்” என்றார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1919 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மக்கள் மீது, பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஜெனரல் டயர் பீரங்கியால் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். மூர்க்கத்தனமான இந்த தாக்குதலில் சுமார் 400 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 1000-த்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சுதந்திர போராட்டத்துக்கு எதிரான அடைக்குமுறைகளில் மிகவும் மோசமான நிகழ்வாக, இந்த தாக்குதல் நினைவுகூரப்படுகிறது.
Related Tags :
Next Story