நிர்பயா பாலியல் வன்கொடுமை: குற்றவாளி அக்‌ஷய் குமார் சிங்கின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது - சுப்ரீம் கோர்ட்


நிர்பயா பாலியல் வன்கொடுமை: குற்றவாளி அக்‌ஷய் குமார் சிங்கின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது - சுப்ரீம் கோர்ட்
x
தினத்தந்தி 18 Dec 2019 8:17 AM GMT (Updated: 18 Dec 2019 9:42 AM GMT)

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி அக்‌ஷய் குமார் சிங்கின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.

புதுடெல்லி

டெல்லியில் 23 வயதான துணை மருத்துவ மாணவி, தனது நண்பருடன் 2012-ம் ஆண்டு, இதே டிசம்பர் மாதம் 16-ந்தேதி இரவு பஸ்சில் பயணம் செய்தபோது 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.

இந்த கொடூர சம்பவம், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோஷம் அப்போது வலுத்தது.

அந்த மாணவி சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்காக போராடினார். 12 நாள் போராட்டத்துக்கு பின்னர் அவர் டிசம்பர் மாதம் 29-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கு நிர்பயா வழக்கு என்று அழைக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிறுவர். அவர் மீதான வழக்கு தனியாக பிரித்து விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றவாளிகளில் ஒருவரான ராம்சிங் டெல்லி திகார் சிறையில் 2013-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நிர்பயா வழக்கை விசாரித்த தனி கோர்ட்டு, இளம்குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி தீர்ப்பு அளித்தது. அவர் தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்டு விட்டார்.

மற்ற 4 குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் குமார் ஆகியோருக்கு மரண தண்டனை (தூக்கு) விதித்து தனி கோர்ட்டு 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந்தேதி தீர்ப்பு அளித்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். 2015-ம் ஆண்டு அந்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். சுப்ரீம் கோர்ட்டும் அவர்கள் மீதான மரண தண்டனையை 2017-ம் ஆண்டு, மே மாதம் 5-ந்தேதி உறுதி செய்தது.

அதைத் தொடர்ந்து முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகிய 3 பேரும் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து கடந்த ஆண்டு ஜூலை 9-ந்தேதி தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில் மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து அக்‌ஷய் குமார் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், “இது பெண்களுக்கு எதிரான வன்முறை, பயங்கரவாதம் என நிரூபிப்பதற்காக அரசாங்கம் வெறுமனே மக்களை தூக்கில் போடக்கூடாது. மாற்றத்தை கொண்டு வருவதற்கு முறையான சீர்திருத்தங்களை நோக்கி அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும். தூக்கில் போடுவது என்பது குற்றவாளியை மட்டுமே கொல்கிறதே தவிர, குற்றத்தை அல்ல” என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் தொடக்கத்திலேயே தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

இந்த வழக்கு  நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை ஏற்க முடியாது என தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட்உறுதி செய்தது.

அரிதிலும் அரிதான மனுவாக இதனைக் கருத முடியாது.  மறுஆய்வு மனு என்பது மீண்டும் விசாரிப்பது அல்ல என நீதிபதிகள் கூறினர். 

Next Story