மாணவர்களின் குரலுக்கு செவி சாய்க்கும் அரசை தேர்ந்தெடுங்கள் -பிரியங்கா காந்தி


மாணவர்களின் குரலுக்கு செவி சாய்க்கும் அரசை தேர்ந்தெடுங்கள்  -பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 18 Dec 2019 11:40 AM GMT (Updated: 2019-12-18T17:10:21+05:30)

மாணவர்களின் குரலுக்கு செவி சாய்க்கும் அரசை தேர்ந்தெடுங்கள் என ஜார்கண்ட் மாநில பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசினார்.

பாகூர்

ஜார்க்கண்டில் ஐந்தாவது மற்றும் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் டிசம்பர் 20-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பாகூர் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

டெல்லியில் மாணவர்கள் குரல் எழுப்பியபோது, போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) தோல்வியுற்றுள்ளது. இதனால் மத்திய அரசு  இப்போது மாணவர்களின் கோபத்தை எதிர்கொள்ளும் ஒரு  திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

மாணவர்கள் நாட்டில் சாலைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போலீஸ் தடியடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

"மாணவர்களின் குரல்களுக்கு செவிசாய்ப்பது, விவசாய  கடன்களை தள்ளுபடி செய்வது, பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குவது மற்றும் உங்கள் (பழங்குடி) கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும்" அரசை நீங்கள் தேர்ந்தெடுங்கள்.

ஜார்கண்ட் அரசு பணக்காரர்களுக்கு வழங்குவதற்காக ஒரு நில வங்கியை உருவாக்கி வருகிறது. நாட்டில் பெண்கள் தாக்கப்படுகிறார்கள்.  காங்கிரஸ் எப்போதும் பழங்குடி கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வந்துள்ளது என கூறினார்.

Next Story