கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் வீட்டில் மத்திய குற்ற பிரிவு போலீசார் சோதனை


கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் வீட்டில் மத்திய குற்ற பிரிவு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 19 Dec 2019 3:50 AM GMT (Updated: 2019-12-19T09:20:21+05:30)

கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் வீட்டில் மத்திய குற்ற பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு,

கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் 2009-ம் ஆண்டில் இருந்து கர்நாடக பிரீமியர் லீக் (கே.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 8-வது கே.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்டு மாதம் நடந்து முடிந்தது.

7 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் உப்பள்ளி (ஹூப்ளி) டைகர்ஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் பல்லாரி டஸ்கர்சை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இதில் குறிப்பிட்ட சில வீரர்கள் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்கக்கூடிய வகையில் ‘மேட்ச் பிக்சிங்’கில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே பெலகாவி பாந்தர்ஸ் அணியின் உரிமையாளரான அலி அஷ்பாக், சூதாட்ட தரகர் பாவேஷ் பக்னா, பெங்களூரு பிளாஸ்டர்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளர் வினு பிரசாத், அந்த அணியின் பேட்ஸ்மேன்களான விஸ்வநாதன், நிஷாந்த் சிங் ஆகியோரை கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சி.எம்.கவுதம், ஆல்-ரவுண்டர் அப்ரார் காஜி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக பிரீமியர் லீக் போட்டியில் நடந்த சூதாட்ட வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட் அடிப்படையில், பெங்களூருவில் உள்ள கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் சந்தோஷ் மேனன் வீட்டில் மத்திய குற்ற பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Next Story