நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது ; காங்கிரஸ் கடும் விமர்சனம்


நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது ;  காங்கிரஸ் கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 19 Dec 2019 1:44 PM GMT (Updated: 19 Dec 2019 1:44 PM GMT)

நாடு முழுக்க அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வட கிழக்கு மாநிலங்களில் தொடங்கிய போராட்டம் தலைநகர் டெல்லிக்கும் மற்ற மாநிலங்களுக்கும் பரவி உள்ளது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையும், அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை வீச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுக்க பல்வேறு நகரங்களில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் இன்றும்  நடைபெற்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அபிஷேக் சிங்வி கூறுகையில், “ டெல்லி நாட்டின் தலைநகரம். செங்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

18 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அரசு உத்தரவுப்படி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் அசாமில் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. நாட்டில் பாஜக ஆட்சி தற்போது நடைபெறவில்லை. அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை  அமலில் உள்ளது” என்றார்.

Next Story