பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல்; காங்கிரஸ் அமைதி காப்பது ஏன்? - பாஜக எம்.பி. கேள்வி
குடியுரிமை திருத்த சட்டத்திற்க் எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சியினர், பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா தாக்கப்பட்டது குறித்து அமைதி காப்பது ஏன் என்று பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
சீக்கிய மதத்தை தோற்று வித்தவரான குருநானக், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தாா். அவரது நினைவாக, அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா், அந்த குருத்வாரா மீதும், அங்கு வந்த சீக்கிய யாத்ரீகா்கள் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியினர் அமைதி காப்பது ஏன் என்று பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது;-
“பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாகிப் குருத்வாரா சீக்கியர்களின் புனித தளமாகும். அதன் பெயரை குலாம்-இ-முஸ்தஃபா என்று மாற்றுமாறு அங்குள்ள சீக்கியர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள் அந்த மண்ணின் மீது பற்று கொண்டு அங்கு வாழ்ந்து வருகிறார்கள். இதை அந்நாட்டு அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீது பல வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இளம் பெண்கள் கடத்தப்பட்டு கற்பழிக்கப்படுவதும், கட்டாய மதமாற்றம் மற்றும் கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுவதும் அங்கு தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
இந்த செயல்களுக்கு அந்த நாட்டு காவல்துறையும் அரசாங்கமும் துணை போகின்றன. மனித உரிமைகள் அங்கு தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன.
இது போன்ற சம்பவங்கள் மூலம் இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் அவசியமானது என்பது தெளிவாகிறது. இந்த சட்டத்தை உடனடியாக இந்தியாவில் அமல்படுத்த வேண்டும் என்பதை பாகிஸ்தான் நிரூபித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்க் எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சியினர், பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா தாக்கப்பட்டது குறித்து அமைதி காப்பது ஏன்? நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தற்போது எங்கு சென்றார்களோ தெரியவில்லை” என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story