நிர்பயா வழக்கு : குற்றவாளிகள் 4 பேரை தூக்கில் போட ஜெயிலில் இன்று ஒத்திகை


நிர்பயா வழக்கு : குற்றவாளிகள் 4 பேரை தூக்கில் போட ஜெயிலில் இன்று ஒத்திகை
x
தினத்தந்தி 8 Jan 2020 12:05 PM GMT (Updated: 8 Jan 2020 12:05 PM GMT)

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட இன்னும் 2 வாரங்களே இருப்பதால் அதற்கு முந்தைய நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.  இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

ஆறு பேரில் ஒருவர் சிறார் என்பதால் அவர் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மீதமுள்ள 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறைக்குள்  தற்கொலை செய்து கொண்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட மற்ற 4 பேரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். சுப்ரீம் கோர்ட்டு 4 பேரின் தூக்கு தண்டனையை உறுதிசெய்தது.

இந்த நிலையில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு வரும் 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி ஐகோர்ட்டு அறிவித்து உள்ளது. 

இதனைத் தொடர்ந்து 4 பேரையும் தூக்கிலிட இன்னும் 2 வாரங்களே இருப்பதால் அதற்கு முந்தைய நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதன் ஒரு பகுதியாக திகார் ஜெயிலில் தூக்கில் இடுவதற்கான ஒத்திகை நடைபெறுகிறது.

தூக்கில் போடப்படும் 4 குற்றவாளிகளின் உடல் எடைக்கு ஏற்ப 60 கிலோ பொம்மைகள் தயார் செய்யப்பட்டு தூக்கில் போடப்பட்டு ஒத்திகை நடத்தப்படுகிறது. கயிறு வலுவாக உள்ளதா? தூக்கில் தொங்கவிடப்படும் பகுதி சரியாக இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு குற்றவாளியும் தனித்தனியாக தொங்க விடப்படுவார்கள். தூக்கு கயிறு அறுந்து விட்டால் உடனடியாக மாற்று கயிறு பயன்படுத்தப்படும். இதற்காக தலா 2 மாற்று கயிறுகள் வீதம் மொத்தம் 8 தூக்கு கயிறுகள் தயார் நிலையில் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே 4 குற்றவாளிகளும் டெல்லி திகார் ஜெயிலில் தனித்தனி அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காலை-மாலை இரு நேரமும் டாக்டர்கள் மூலம் உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story