கேரளாவில் துப்பாக்கி முனையில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியா் சிறைபிடிப்பு; 4 போ் கைது


கேரளாவில் துப்பாக்கி முனையில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியா் சிறைபிடிப்பு; 4 போ் கைது
x
தினத்தந்தி 9 Jan 2020 3:30 PM GMT (Updated: 2020-01-09T21:19:37+05:30)

கேரளாவில் துப்பாக்கி முனையில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியா் சிறைபிடித்தது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனா்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் நேற்று தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றபோது நோபல் பரிசு பெற்ற வெளிநாட்டு பேராசிரியா் மனைவியுடன் படகில் சிறை பிடிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனா்.

தொழிலாளர் பாதுகாப்புச் சட்டச் சீர்திருத்தத்தை மத்திய அரசு கைவிட்டதைத் தொடர்ந்து மத்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஸ்டீல், ரெயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவா்கள் பங்கேற்றனர்.  

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம் உள்பட பல மாநிலங்களில் இந்த வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. கேரளாவில் நடந்த வேலைநிறுத்தம் முழு அடைப்பு போராட்டமாக மாறியது. இதையடுத்து தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. வெளி மாநிலங்களிலிருந்து கேரளாவுக்குச் செல்லும் பஸ்கள் இரு மாநில எல்லைகளில் நிறுத்தப்பட்டன. கேரளாவின் பல்வேறு இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில், நோபல் பரிசு பெற்ற பேராசிரியா் ஒருவரை கேரள போராட்டக்காரர்கள் சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மைக்கேல் லெவிட் என்பவர் அமெரிக்க-பிரிட்டிஷ்-இஸ்ரேலிய உயிர் இயற்பியலாளராகவும் அமெரிக்காவின் பிரபல ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு உயிரியல் பேராசிரியராகவும் உள்ளார். இவா் கடந்த 2013-ம் ஆண்டு தன் வேதியியல் பணிகளுக்காக நோபல் பரிசு பெற்றவா். இவா் கடந்த வாரம் கேரளாவில் நடந்த ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அம்மாநில அரசின் முக்கிய விருந்தினராக கொச்சி வந்தார்.

இந்த நிலையில், நேற்று மைக்கேல் லெவிட் தன் குடும்பத்தினருடன் ஆழப்புலாவில் உள்ள ஏரியில் சுற்றுலா படகு சவாரி செய்துள்ளார். அப்போது அங்கு வந்த போராட்டக்காரா்கள் மைக்கேல் லெவிட்டின் படகை நடுவழியிலேயே நிறுத்தி சிறைபிடித்தனா். மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம் நடப்பதால் படகு இயக்கக் கூடாது என துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனா். பின்னா் சில மணி நேரம் கழித்து அவா் விடுவிக்கப்பட்டார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த மைக்கேல் லெவிட், தன்னுடைய சுற்றுலா ஏஜென்டுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் , “நாங்கள் படகு சவாரி செய்துகொண்டிருக்கும்போது பாதிவழியிலேயே நிறுத்தப்பட்டோம். துப்பாக்கி முனையில் போராட்டக்காரா்கள் எங்களைத் தடுத்தனா். பின்னர் சில மணி நேரங்கள் கழித்தே எங்கள் படகை விடுவித்தனா். வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும்போது சுற்றுலாவுக்கு செல்லக்கூடாது என்று அவா்கள் கூறுகின்றனா். எங்களை மிரட்டிய நபரிடம் நான் கேரள அரசின் விருந்தினர் என்ற கூறியும் அவா் கேட்கவில்லை. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது என்பதை அறிந்தே பேசினார். வருத்தமான விஷயம் என்னவென்றால், இந்தியா கொஞ்சம் கொஞ்சமாகச் சட்டவிரோதத்தில் மூழ்கி வருகிறதோ என்ற பயம் எனக்கு வந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதுகுறித்து மைக்கேல் லெவிட் எந்த புகாரும் அளிக்கவில்லை.

இதுகுறித்து கோட்டயம் மாவட்ட கலெக்டர் சுதீர் பாபு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் கலெக்டர் கூறுகையில், “நான் அரசாங்கத்தின் சார்பாக வருத்தத்தையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளேன். மைக்கேல் லெவிட் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார். மீண்டும் கேரளாவுக்கு வருவேன் என்றும் அவா் கூறினார்” என்று தெரிவித்தார்.

மைக்கேல் லெவிட்டின் மின்னஞ்சல் தொடர்பான தகவல் கேரளா சுற்றுலாத்துறை மந்திரிக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அவா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். படகு உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் மைக்கேல் லெவிட்டை மிரட்டியவர்கள் 4 போ் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

என்ன தான் போராட்டங்கள் நடந்தாலும் வெளிநாட்டவாிடம் கடுமையாக நடந்து கொள்வது மாநில பண்பாட்டை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது என பலா் சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனா். 

Next Story