டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொலை: தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க குற்றவாளி சீராய்வு மனு; சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்


டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொலை: தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க குற்றவாளி சீராய்வு மனு; சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
x
தினத்தந்தி 9 Jan 2020 10:28 PM GMT (Updated: 9 Jan 2020 10:28 PM GMT)

டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வினய் குமார் சர்மா, கடைசி முயற்சியாக சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்து உள்ளார்.

புதுடெல்லி, 

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 வயது மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் வினய் குமார் சர்மா (வயது 26), முகேஷ் (32), பவன் குப்தா (25), அக்‌ஷய் குமார் சிங் (31), ராம் சிங் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ராம் சிங் டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு இருந்த சிறுவன், பின்னர் விடுதலை செய்யப்பட்டான். வினய் குமார் சர்மா, முகேஷ், பவன் குப்தா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் விசாரணை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது.

பின்னர் அந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து அவர்களுடைய மறுஆய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. 4 பேரின் கருணை மனுக்களையும் ஜனாதிபதி தள்ளுபடி செய்து விட்டார்.

இதைத்தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் வினய் குமார் சர்மா, முகேஷ், பவன் குப்தா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேரையும் வருகிற 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போட கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் 4 பேரில் ஒருவரான வினய் குமார் சர்மா கடைசி முயற்சியாக, தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இளம் வயதில் சூழ்நிலையின் காரணமாக வினய் குமார் சர்மா தவறு செய்து விட்டார். உடல்நலம் குன்றிய அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரையும் கருத்தில் கொள்ளவேண்டும். சிறையில் அவரது நன்னடத்தை கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்த வழக்கில் 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதில் சமுதாயத்தின் எண்ண ஓட்டம், பொதுமக்கள் மத்தியில் உருவான கருத்து ஆகியவை பங்கு வகித்துள்ளது.

ஏற்கனவே இதுபோன்ற சில வழக்குகளில் விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு உள்ளது.

நிர்பயா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு 4 பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்த பிறகு, 17 கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் பல்வேறு அமர்வுகள் சம்பந்தபட்ட குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்து இருக்கின்றன. எனவே வினய் குமார் சர்மாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


Next Story