ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட 9 பேரின் புகைப்படங்களை போலீஸ் வெளியிட்டது


ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட 9 பேரின் புகைப்படங்களை போலீஸ் வெளியிட்டது
x
தினத்தந்தி 10 Jan 2020 10:27 PM GMT (Updated: 2020-01-11T03:57:44+05:30)

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகப்படும் 9 பேரின் புகைப்படங்களை டெல்லி போலீசார் வெளியிட்டனர். இதில் மாணவர் சங்க தலைவி ஐஷ் கோஷ் என்பவரும் ஒருவர்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்துக்குள் கடந்த 5-ந் தேதி முகமூடி அணிந்த ஒரு கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்துவரும் டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜாய் திர்கேய், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் 9 பேரின் புகைப்படங்களை வெளியிட்டார். அதில் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க (ஜே.என்.யு.எஸ்.யு.) தலைவி ஐஷ் கோஷ் படமும் உள்ளது.

பின்னர் துணை கமிஷனர் ஜாய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தாக்குதலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ள 9 பேரில் 7 பேர் இடதுசாரி மாணவர் சங்கங்களையும், 2 பேர் வலதுசாரி மாணவர் சங்கங்களையும் சேர்ந்தவர்கள்.

பல்கலைக்கழகத்தின் பெரும்பான்மையான மாணவர்கள் ஜனவரி 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடைபெற்ற பருவ தேர்வுகளை (செமஸ்டர்) எழுதுவதற்காக பதிவு செய்ய விரும்பினார்கள். ஆனால் இடதுசாரி மாணவர் சங்கத்தினர் அவர்களை தடுத்தனர். 5-ந் தேதி நடைபெற்ற வன்முறையில் பல்கலைக்கழகத்தின் பெரியார் விடுதியில் உள்ள குறிப்பிட்ட அறைகள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளது.

ஐஷ் கோஷ் உள்பட பலர் அந்த விடுதியில் உள்ள மாணவர்களை தாக்கியுள்ளனர். கோஷ் இந்த தாக்குதலில் காயம் அடைந்ததாக கூறப்படுவது தவறு. அவருக்கு எதிராக உள்ள ஆதாரங்களை வெளியிட டெல்லி போலீஸ் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி போலீசாரின் விசாரணைக்கு மத்திய மந்திரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி டுவிட்டரில், “ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இடதுசாரிகளின் முகமூடி கழற்றப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு வன்முறை கும்பலுக்கு தலைமை தாங்கியுள்ளனர். வரிசெலுத்துவோரால் வாங்கிக்கொடுக்கப்பட்டுள்ள பொது சொத்துகளை சேதப்படுத்தி உள்ளனர். புதிய மாணவர்களை பதிவு செய்யவிடாமல் தடுத்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தை அரசியல் போர்க்களமாக பயன்படுத்தி உள்ளனர். டெல்லி போலீஸ் விசாரணையில் இடதுசாரிகளின் வன்முறை மக்களுக்கு தெரியவந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லி போலீசாரின் விசாரணை உண்மையை வெளிப்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் சதித்திட்டமும், வலுவான சக்திகளின் தூண்டுதலும் இருக்கிறது.

ஒரே பொதுவான காரணத்தால்தான் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் கடந்த தேர்தல்களில் மக்களால் புறக்கணிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளுக்கு எனது வேண்டுகோள், நீங்கள் உங்கள் அரசியலை தொடருங்கள், ஆனால் மாணவர்களை இதில் சிக்கவைக்காதீர்கள்.

அரசியல்வாதிகள் உங்களை தவறாக வழிநடத்த அனுமதிக்காமல், மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். தூண்டுதலுக்கு ஆளாகாதீர்கள். நேரு பல்கலைக்கழக வன்முறைக்கு பின்னால் உள்ள உண்மைகளை போலீசார் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ். ஆதரவு சங்கமான அகில பாரதீய வித்யார்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) 5-ந் தேதி நடைபெற்ற வன்முறை தாக்குதலை கண்டித்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் பேரணி நடத்தியது. இதில் மாணவர்கள் கம்யூனிஸ்டு இயக்கத்துக்கு எதிராகவும், ‘எங்கள் கல்வியை தொடரவிடு’ என்றும் கோஷம் எழுப்பினார்கள்.


Next Story