நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் நடத்திய எதிர்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை!
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் நடத்திய எதிர்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.
புதுடெல்லி
குடியுரிமை திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்று இருந்த திருமாவளவன் மட்டும் கலந்து கொண்டார்.
ஏற்கனவே இந்த கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மி மற்றும் சிவசேனா ஆகிய கடசிகள் கலந்து கொள்ளப்போவது இல்லை என அறிவித்து விட்டன. எதிர்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.
ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான திமுக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாதது அரசியல் வடாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே தமிழக காங்கிரசுக்கும் - திமுகவுக்கும் இடையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மனக்கசப்பு உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் பதவிகள் வழங்குவதில் திமுக கட்சியினர் கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
“தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. தொடக்கத்திலிருந்து எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.
303 ஒன்றிய தலைவர் பதவிகளில் 2 மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. மாவட்ட அளவில் திமுகவுடன் எந்தவித ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை.
இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பான செயல். திமுகவின் இந்த செயல் வேதனையளிப்பதாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி இருந்தனர்.
இது இரு கட்சிகளுக்குமிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது. பின்னர் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு உள்ள கே.எஸ்.அழகிரி,
மதவாத சக்திகளை எதிர்க்கும் திமுகவின் செயல்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவளித்து துணை நிற்கும். திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தேர்தல் களத்தில் பல வெற்றிகளை குவித்துள்ள நிலையில் தொடர்ந்து ஒற்றுமையுடனும் புரிதலுடனும் உறுதியோடு செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story