நிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22-ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற இயலாது - டெல்லி அரசு


நிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22-ம் தேதி  தூக்குத் தண்டனை நிறைவேற்ற இயலாது - டெல்லி அரசு
x
தினத்தந்தி 15 Jan 2020 9:21 AM GMT (Updated: 2020-01-15T14:51:13+05:30)

கருணை மனு நிலுவையில் இருப்பதால் ஜனவரி 22-ம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற இயலாது! என டெல்லி அரசு கூறி உள்ளது.

புதுடெல்லி

நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22–ந்தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டது.  இதைத்தொடர்ந்து திகார் சிறையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார். தூக்கு தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து இந்த மனுவை அவர் தாக்கல் செய்திருப்பதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 4 பேரில் சிறை விதிகளை மீறியதாக, வினய் 11 முறையும், முகேஷ் 3 முறையும், பவன் 8 முறையும், அக்ஷய் ஒரு தடவையும் தண்டிக்கப்பட்டதாக திஹார் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குற்றவாளிகளில் 3 பேர் சேர்ந்து சிறையில் வேலை பார்த்ததில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.  

கருணை மனு நிலுவையில் இருப்பதால் ஜனவரி 22-ம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற இயலாது என டெல்லி அரசு ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளது.

இது குறித்து திகார் சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல் ராகுல் மெஹ்ரா ஐகோர்ட்டில் கூறியதாவது 

ஒரு மரண குற்றவாளியின் தலைவிதி அவரது கருணை மனுவை ஜனாதிபதி  நிராகரித்த பின்னரே இறுதி நிலைக்கு வருகிறது. கருணை மனுவை நிராகரித்த பின்னர் குற்றவாளிகளுக்கு 14 நாட்கள் அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறும் விதிக்கு நாங்கள் கட்டுப்பட்டிருப்பதால், நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குப் பிறகுதான் இதை நடத்த  முடியும் என கூறினார்.

Next Story