வருமான வரி விகிதம் குறைப்பு: மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு


வருமான வரி விகிதம் குறைப்பு: மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2020 12:15 AM GMT (Updated: 2 Feb 2020 6:42 AM GMT)

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வருமான வரி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவித்தார். எல்.ஐ.சி. பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்றும் அப்போது அவர் கூறினார்.

புதுடெல்லி,

2020-2021-ம் ஆண்டுக் கான மத்திய அரசின் பட்ஜெட்டை (வரவு- செலவு திட்டம்) நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வது இது 2-வது தடவை ஆகும்.

பட்ஜெட் உரையை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, புதிய வரிகள், வரிச்சலுகைள், வருமான வரிவிகிதங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது, பொருளாதார வளர்ச்சியின் பலன் அனைவரையும் சென்றடைவது, மனிதாபிமான அடிப்படையிலான சமுதாயத்தை உருவாக்குவது ஆகிய 3 முக்கிய அம்சங்களை உள்ளடக்கி பட்ஜெட்டை தயாரித்து இருப்பதாக அவர் கூறினார்.



 

நடுத்தர மக்கள் மற்றும் மாதச் சம்பளம் பெறுவோரின் நலனை கருத்தில் கொண்டும், மக்களின் வாங்கு திறனை அதிகரிக்கும் நோக்கத்திலும் தனிநபர் வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன், பட்ஜெட் உரையின்போது, திருக்குறள், ஆத்திச்சூடி ஆகியவற்றை அவர் மேற்கோள் காட்டினார்.

வருமான வரி விதிப்பு விகிதங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய விவரம் வருமாறு:-

* ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி கிடையாது. ரூ.5 லட்சம் முதல் ரூ.7½ லட்சம் வரை உள்ளவர்கள் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இது தற்போது 20 சதவீதமாக உள்ளது.

* ரூ.7½ லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் இருந்தால் 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இது தற்போது 20 சதவீதமாக உள்ளது.

* ரூ.10 லட்சம் முதல் ரூ.12½ லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும். இது தற்போது 30 சதவீதமாக இருக்கிறது.

* ரூ.12½ லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் இருந்தால் 25 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இது தற்போது 30 சதவீதமாக உள்ளது.

* ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப் படும்.

* இந்த புதிய வரி விகிதத்தின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்.

* என்றாலும் இந்த புதிய வரி விகிதங்கள் வரி செலுத்துவோரின் விருப்ப தேர்வுக்கு உட்பட்டது. அதாவது, இந்த புதிய வரி விகிதத்தின்படி வரி செலுத்த விரும்புவோர் ஏற்கனவே 80சி, 80டி ஆகிய பிரிவுகளின் கீழ் வரும் வரிக்கழிவுகளையும், விடுமுறை கால பயண சலுகை, வீட்டு வாடகை கழிவு, கேளிக்கை அலவன்சு கழிவு, தொழில் வரி கழிவு ஆகிய சலுகைகளை பெற முடியாது.

* 80சி பிரிவின் கீழ் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, எல்.ஐ.சி. பொது சேமநல நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், தேசிய சேமிப்பு திட்டம், 2 குழந்தைகளுக்கான கல்வி கட்டணம், வரி சேமிப்பு பத்திரங்கள், வீட்டுக்கடனுக்கான அசல் தவணை தொகை ஆகியவற்றின் கீழ் ரூ.1½ லட்சம் வரை சலுகை உள்ளது. இதேபோல் 80டி பிரிவின் கீழ் ரூ.25 ஆயிரம் வரை வரிக்கழிவு பெற முடியும்.

* அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு, வீட்டுக் கடனுக்கு சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை வீட்டுக்கடனுக்கு, ஏற்கனவே உள்ள ரூ.2 லட்சத்துடன் கூடுதலாக ரூ.1½ லட்சம் வரை வட்டி சலுகை பெற முடியும். முதன் முதலாக ரூ.45 லட்சம் வரை வீட்டுக்கடன் வாங்கியவர்கள் இந்த சலுகையை பெற முடியும். வருகிற மார்ச் மாதம் வரை வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள பிற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* 2020-2021-ம் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேளாண்மை, நீர்ப்பாசனம் மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவிடப்படும்.

* 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் மின்சார பம்பு செட்டுகள் அமைத்துத் தரப்படும்.

* ஊரக அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களுக்கு ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

* சுகாதார துறைக்கு ரூ.69 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

* ரியல் எஸ்டேட் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மலிவு விலை வீடுகள் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு வரிச்சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது இத்தகைய வீட்டு வசதி திட்டங்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஒப்புதல் பெறுபவர்களுக்கு வரி கிடையாது.

* புதிய கல்வி கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்.

* கல்வி துறைக்கு 99 ஆயிரத்து 300 கோடியும், திறன் மேம்பாட்டுக்கு 3,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

* தேசிய தகுதி பட்டியலில் முதல் நூறு இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பு தொடங்கப்படும்.

* ஏற்கனவே உள்ள மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைந்து மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்படும். தனியார் பங்களிப்புடன் இந்த மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்.

* 2022-2023-ம் ஆண்டுக் குள் மீன் உற்பத்தியை 2 கோடி டன்னாக உயர்த்த இலக்கு. 2024-2025-ம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடிக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படும்.

* வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.12 ஆயிரத்து 300 கோடி செலவிடப்படும்.

* மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ரூ.22 ஆயிரம் கோடி செலவிடப்படும்.

* ஆதிச்சநல்லூர் (தூத்துக் குடி மாவட்டம்) உள்ளிட்ட 5 இடங்களில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

* 150 ரெயில்கள் தனியார் பங்களிப்புடன் இயக்கப்படும்.

* முக்கிய சுற்றுலா நகரங்களுக்கு தேஜஸ் ரெயில்கள் விடப்படும்.

* 27 ஆயிரம் கிலோ மீட்டர் நீள ரெயில் பாதை மின்மயம் ஆக்கப்படும்.

* ரெயில் தடங்களையொட்டி சூரிய ஒளி மின்சக்தி நிலையங்கள் அமைக்கப்படும்.

* 2024-ம் ஆண்டுக்குள் உதான் திட்டத்தின் கீழ் மேலும் 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

* தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுக்கு ரூ.27 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு.

* 5 நகரங்கள் சீர்மிகு நகரங்களாக (ஸ்மார்ட் சிட்டி) மேம்படுத்தப்படும்.

* செல்போன், மின்னணு சாதனங்கள் உற்பத்தியை மேம்படுத்த ஊக்கம் அளிக்கப்படும்.

* ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்.ஐ.சி.) பங்குகளில் ஒரு பகுதி தனியாருக்கு விற்பனை செய்யப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் அடிப்படை கட்டுமான திட்டங்களில் ரூ.100 கோடி முதலீடு செய்யப்படும்.

* போக்குவரத்து தொடர்பான அடிப்படை கட்டுமான திட்டங்களுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* மக்கள் தொகை மிகுந்த நகரங்களில் சுத்தமான காற்றை உறுதி செய்வதற்கான திட்டங்களை செயல்படுத்த ரூ.4,400 கோடி செலவிடப்படும்.

* சென்னை-பெங்களூரு இடையே அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் பட்ஜெட் உரையில் இடம்பெற்று உள்ளன.


Next Story