அயோத்தி அருகே மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம்: உத்தரபிரதேச அரசு ஒதுக்கீடு


அயோத்தி அருகே மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம்: உத்தரபிரதேச அரசு ஒதுக்கீடு
x
தினத்தந்தி 5 Feb 2020 8:19 AM GMT (Updated: 5 Feb 2020 10:09 PM GMT)

சன்னி வக்பு வாரியம் மசூதி கட்ட அயோத்தி அருகே 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு ஒதுக்கீடு செய்தது.

லக்னோ,

அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், கடந்த நவம்பர் 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு அளித்தது. ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது.

மேலும், மசூதி கட்டுவதற்கு மற்றொரு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்கித்தர வேண்டும் என்று உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்த 3 மாத ‘கெடு’, வருகிற 9-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்துக்கு உத்தரபிரதேச அரசு நேற்று 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தது. அயோத்தி மாவட்டத்தில் சோஹாவால் தாலுகா தான்னிபூர் கிராமத்தில் லக்னோ நெடுஞ்சாலையில் இந்த நிலம் அமைந்துள்ளது. மாவட்ட தலைநகரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது.

நிலம் குறித்து மாநில அரசின் செய்தித்தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறியதாவது:-

இந்த நிலம், போக்குவரத்து வசதி நிலவும் இடத்தில் இருக்கிறது. அங்கு மத நல்லிணக்கமும், சட்டம்-ஒழுங்கும் நன்றாக உள்ளது. 3 வெவ்வேறு இடங்களில் உள்ள 5 ஏக்கர் நிலங்களை மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்திருந்தோம்.

அவற்றில் இந்த நிலத்தைத்தான் மத்திய அரசு தேர்வு செய்தது. எனவே, அதையே ஒதுக்கீடு செய்து விட்டோம் என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, இந்த நிலத்தை பெறுவதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் மூத்த செயற்குழு உறுப்பினர் மவுலானா யாசின் உஸ்மானி கூறியதாவது:-

அயோத்தியில் எந்த நிலத்தையும் பெறுவதில்லை என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும், அதன் துணை அமைப்புகளும் முடிவு செய்துள்ளன. சன்னி வக்பு வாரியம், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதிநிதி அல்ல. ஒருவேளை, அந்த 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் பெற்றுக்கொண்டால், அதை அனைத்து முஸ்லிம்களின் முடிவாக கருதக்கூடாது. என்று அவர் கூறினார்.

அதே சமயத்தில், ஷியா வக்பு வாரியம் என்ற மற்றொரு அமைப்பின் தலைவர் வாசிம் ரிஸ்வி கூறியதாவது:-

பாபரின் தளபதியான, ஷியா பிரிவைச் சேர்ந்த மீர்பாகிதான், பாபர் மசூதியை கட்டினார். எனவே, ஷியா வக்பு வாரியத்துக்குத்தான் 5 ஏக்கர் நிலத்தை அளித்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் குரல் எழுப்ப தவறியதால், சன்னி பிரிவுக்கு சென்று விட்டது.

அந்த நிலத்தை எங்களுக்கு தந்திருந்தால், இன்னொரு ராமர் கோவிலை கட்டி இருப்போம் என்று அவர் கூறினார்.


Next Story