இடஒதுக்கீடு விவகாரம்: மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு


இடஒதுக்கீடு விவகாரம்: மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு
x
தினத்தந்தி 10 Feb 2020 4:07 PM GMT (Updated: 10 Feb 2020 4:07 PM GMT)

இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, 2012-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 5-ந் தேதி, மாநில அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல், அரசு காலி பணியிடங்களை நிரப்ப முடிவு எடுத்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உத்தரகாண்ட் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அரசு உத்தரவை ரத்து செய்தது. குறிப்பிட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் உத்தரகாண்ட் அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா அமர்வு விசாரித்தது.

விசாரணை முடிவில், “இந்த கோர்ட்டு வகுத்துள்ள சட்டத்தை கருத்தில் கொள்கிறபோது மாநில அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பதவி உயர்வில் இடஒதுக்கீடு கேட்பதற்கு எந்தவொரு தனி நபருக்கும் உள்ளார்ந்த எந்த அடிப்படை உரிமையும் இல்லை” என அதிரடி தீர்ப்பு அளித்தது. 

இதையடுத்து உத்தரகண்ட் பாஜக அரசு திட்டமிட்டு இடஒதுக்கீட்டை சீர்குலைக்க நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்த விவகாரம் மக்களவையிலும் புயலை கிளப்பியது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் இந்த பிரச்சினையை எழுப்பி இடஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் இந்த புகாரை மத்திய அரசு மறுத்துள்ளது.

இதுதொடர்பாக மக்களவையில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை  மந்திரி  ராஜ்நாத் சிங்  உத்தரகண்ட் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற்ம தீர்ப்பளித்துள்ளது. இதற்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இதனை காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே அரசியலாக்குகிறது. உத்தரகண்ட் அரசு 2012-ம் ஆண்டு இடஒதுக்கீடு வழங்காமல் அறிவிக்கை வெளியிட்டபோது அந்த மாநிலத்தில் பதவியில் இருந்தது காங்கிரஸ் எனக் கூறினார்.

இந்தநிலையில் இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. பிப்ரவரி 16-ம் தேதிக்கு முன்னதாக இந்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story