பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய காஷ்மீர் மாணவர்கள் மீண்டும் கைது


பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய காஷ்மீர் மாணவர்கள் மீண்டும் கைது
x
தினத்தந்தி 17 Feb 2020 8:21 AM GMT (Updated: 17 Feb 2020 8:21 AM GMT)

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய காஷ்மீர் மாணவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஹூப்ளி, 

கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகரில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மத்திய அரசின் இட ஒதுக்கீடு மூலம் காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த அமீர், பாசித், தலிப் ஆகிய 3 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

புல்வாமா தாக்குதல் நடந்த முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமையன்று கல்லூரி விடுதியில் இந்த 3 மாணவர்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதுதொடர்பான வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகியது. இதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் பசவராஜ் அனாமி போலீஸார் புகார் அளித்தார்.

இதையடுத்து 3 மாணவர்களையும்  ஹூப்ளி போலீஸார் தேச துரோக வழக்கில் கைது செய்தனர்.  மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப்பின் சிஆர்பிசி 169 பிரிவின் கீழ் பத்திரத்தில் 3 மாணவர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு நேற்று அவர்கள் விடுவிக்கப்பட்டனர். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வர வேண்டும் எனும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.

 ஆனால், மாணவர்களை விடுதலை செய்ததற்கு எதிராக  சில இந்து அமைப்புகளும், வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், காஷ்மீர் மாணவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். மாணவர்களை வரும் மார்ச் 2 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க ஹூப்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story